தென் ஆப்ரிக்காவுடன் 3வது ஒருநாள் பகார் ஜமான் மீண்டும் சதம்

தினகரன்  தினகரன்
தென் ஆப்ரிக்காவுடன் 3வது ஒருநாள் பகார் ஜமான் மீண்டும் சதம்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், முன்னணி வீரர்களின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன் குவித்தது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், தொடரை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டின. இமாம் உல் ஹக் - பகார் ஜமான் தொடக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 21.2 ஓவரில் 112 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இமாம் 57 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.அடுத்து பகார் ஜமானுடன் இணைந்த கேப்டன் பாபர் ஆஸம் அதிரடியில் இறங்க பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 2வது போட்டியில் அபாரமாக விளையாடி 193 ரன் குவித்த பகார் ஜமான் நேற்று 101 ரன் (104 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ரிஸ்வான் 2, சர்பராஸ் அகமது 13, பாகீம் அஷ்ரப் 1, நவாஸ் 4 ரன்னில் அணிவகுத்தாலும், பொறுப்புடன் விளையாடிய பாபர் ஆஸம் 94 ரன் (82 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன் குவித்தது.கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஹசன் அலி 32 ரன்னுடன் (11 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கேஷவ் மகராஜ் 3, எய்டன் மார்க்ரம் 2, பெலுக்வாயோ, ஸ்மட்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஜென்னிமேன் மாலன் 70 ரன், மார்க்ரம் 18, ஸ்மட்ஸ் 17 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 23.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து தடுமாறியது.

மூலக்கதை