டெல்லி, மும்பையில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்!: கொரோனா அச்சம், வேலையிழப்பு காரணம் என கண்ணீர்..!!

தினகரன்  தினகரன்
டெல்லி, மும்பையில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்!: கொரோனா அச்சம், வேலையிழப்பு காரணம் என கண்ணீர்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டியுள்ளது. நேற்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,15,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி உச்சத்தில் இருந்த கொரோனா அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. உயிரிழப்பும் பெரிய அளவில் இல்லை. ஆனால் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளதால் அந்நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, நான் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்கிறேன். டெல்லியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் தொற்று பரவல் அச்சம் காரணமாக பலர் சொந்த ஊர் திரும்புகின்றனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். புனே ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் திரண்டதால் ரயில்வே நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை எடுத்தது. தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டன.

மூலக்கதை