கட்சியினர் விழிப்போடு பணியாற்ற வேண்டும்: பழனிசாமி - பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
கட்சியினர் விழிப்போடு பணியாற்ற வேண்டும்: பழனிசாமி  பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை:'அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களை, சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வும்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆசியோடு, ஜெ., அரசு மக்கள் நலனை முன் வைத்து, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.அந்த வகையில், அ.தி.மு.க., அரசு தொடர வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, அராஜகத்தில், வன்முறையில் கைதேர்ந்த, தி.மு.க.,வினரின், பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, நேற்று முன்தினம் சுமூகமான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேர்தல் பணியாற்றிய, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மே, 2 அன்று ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், கவனக்குறைவாக இருக்கக் கூடாது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையங்களை, மிகுந்த எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன், சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.இவ்வாறு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மூலக்கதை