மிரட்டும் கொரோனா!: பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

தினமலர்  தினமலர்
மிரட்டும் கொரோனா!: பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

சென்னையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தி, உயிரிழப்பை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் வசிக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட, 22 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா தொற்று பரவ துவங்கியது. தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்ததை அடுத்து, 2020 மார்ச் கடைசி வாரத்தில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.ஊரடங்குக்கு பின், கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று குறைந்தாலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் அதிகரித்தது. அந்த வகையில், கடந்த, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதற்கிடையே, கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

அதன் பலனாக, பல கட்ட ஆராய்ச்சிக்கு பின், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய, இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இவை இரண்டும், ஊசி மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு, ஜன., 16 முதல், தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல் கட்டமாக, சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.பின், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அதன் பின், 45 வயது மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதாலும், பொதுமக்களின் கவனக்குறைவாலும், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடந்த மாநிலங்கள் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, தமிழக தலைநகர் சென்னையில், தினசரி பாதிப்பு சராசரியாக, 1,400 என்ற நிலையில் உள்ளது. தன்னார்வ முறையில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், பலர் அலட்சியம் காட்டுவதால், சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில், 22 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி போட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏழு நாட்களில் 6.8 சதவீதம் அதிகரிப்புசென்னையில், ஏழு நாட்களில் கொரோனா தொற்று பரவல் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2 சதவீதத்தில் இருந்து, 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.பாதிப்புள்ள மண்டல வாரியான விபரம்:மண்டலம் - பாதிப்பு சதவீதம்அண்ணா நகர் - 9.3 சதவீதம்தண்டையார்பேட்டை - 9.1 சதவீதம்திருவொற்றியூர் - 8.9 சதவீதம்வளசரவாக்கம் - 8.8 சதவீதம்அம்பத்துார் - 8.4 சதவீதம்ராயபுரம் - 8.3 சதவீதம்பெருங்குடி - 8.2 சதவீதம்மணலி - 7.1 சதவீதம்கோடம்பாக்கம் - 6.8 சதவீதம்தேனாம்பேட்டை - 6.0 சதவீதம்மாதவரம் - 6.0 சதவீதம்ஆலந்துார் - 5.1 சதவீதம்அடையாறு - 5.0 சதவீதம்திரு.வி.க.நகர் - 4.8 சதவீதம்சோழிங்கநல்லுார் - 0.1 சதவீதம்சென்னை மாநகராட்சியில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்அரசு மையங்கள் - 160(நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மினி கிளினிக்)அரசு மருத்துவமனைகள் - 19தனியார் மருத்துவமனைகள் - 175முதல் டோஸ் செலுத்திக்கொண்டோர் - 8 லட்சம் பேர்இரண்டாவது டோஸ் செலுத்தியோர் - 10 ஆயிரம் பேர்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!இது குறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:அனைத்து தடுப்பூசி மையங்களிலும், போதிய அளவில் மருந்துகள் உள்ளன. தடுப்பூசியை பொறுத்தவரையில், தேவையற்ற வதந்திகள் பகிரப்படுகின்றன. எந்த ஒரு தடுப்பூசியாக இருந்தாலும், 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை. ஆனால், இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. உதாரணமாக, 100 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, இயல்பை விட பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். இதனால், உயிரிழப்பையும், உடல் உறுப்புகள் பாதிப்பையும் தடுக்க முடியும். எனவே, தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் வாயிலாக, அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்தலாம்.கோவிஷீல்டு, முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள், ஆறு முதல் எட்டு வார இடைவெளியில், இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளலாம்.

அதேபோல், கோவாக்சின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள், நான்கு வார இடைவெளியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வப்போது மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. எனவே, முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள், எவ்வித தொய்வின்றி தொடர்ந்து போடப்படும். அனைத்து வார நாட்களிலும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை