சேவைகள் துறை உற்பத்தி 6வது மாதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
சேவைகள் துறை உற்பத்தி 6வது மாதமாக அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி, தொடர்ந்து, ஆறாவது மாதமாக வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும், பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது சற்று குறைவு தான்.

‘ஐ.எச்.எஸ் – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி குறியீடு, 54.6 புள்ளிகளாக உள்ளது. இதுவே, பிப்ரவரி மாதத்தில், 55.3 புள்ளிகளாக இருந்தது.இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும். மாநில தேர்தல்கள் தேவையை அதிகரித்த போதிலும், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த காரணத்தினால், வளர்ச்சி குறைந்து போனது.

வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் ஆர்டர்கள் தொடர்ந்து, 13வது மாதமாக சரிவைக் கண்டு வருகிறது.இந்தியாவில், தயாரிப்பு துறை மற்றும் சேவைகள் துறை இரண்டும் சேர்ந்த, உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில், 56 புள்ளிகளாக உள்ளது. இது கடந்த பிப்ரவரியில் 57.3 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை