ஆசிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் மீண்டும் முதலிடம்

தினமலர்  தினமலர்
ஆசிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் மீண்டும் முதலிடம்

நியூயார்க்:ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர், முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவின், 'போர்ப்ஸ்' இதழ், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிய அளவிலும், இந்தியாவிலும் உள்ள பணக்காரர்களில், முகேஷ் அம்பானி, ஆறு லட்சத்து, 34 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், முதலிடத்தில் உள்ளார். இவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 10வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு, ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த, சீனாவின் அலிபாபா நிறுவன தலைவர், ஜாக் மா, இந்தாண்டு, ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஓராண்டில் இவர் சொத்து மதிப்பு, 75ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ள போதிலும், மொத்த சொத்து, மூன்று லட்சத்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே உள்ளது. இவர், உலக பணக்காரர்களில், 17வது இடத்தில் இருந்து, 26வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவில், முகேஷ் அம்பானியை அடுத்து, இரண்டாவது பெரும் பணக்காரராக, அதானி குழுமத்தின் தலைவர், கவுதம் அதானி உள்ளார். இவர் சொத்து மதிப்பு, மூன்று லட்சத்து, 78 ஆயிரம் கோடி ரூபாய். உலக பணக்காரர்களில், இவர், 24வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல்.,டெக்னாலஜிஸ் நிறுவனர், ஷிவ் நாடார், ஒரு லட்சத்து, 76ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர், உலக பணக்காரர்களில், 71வது இடத்தில் உள்ளார். 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் நிறுவனத்தை உருவாக்கிய, சைரஸ் பூனாவாலா, இந்திய பணக்காரர்களில், ஏழாவது இடத்தில் உள்ளார்.

உலக பணக்காரர்களில், 'அமேசான்' நிறுவனர், ஜெப் பிசோஸ், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். இவர் சொத்து மதிப்பு, 13 லட்சத்து, 27ஆயிரம் கோடி ரூபாய். இரண்டாவது இடத்தில், 'டெஸ்லா' மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர், எலன் மஸ்க், 11 லட்சத்து, 32 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் உள்ளார். கடந்த ஆண்டு, 31வது இடத்தில் இருந்த இவர், டெஸ்லா பங்கு விலை, 705 சதவீதம் உயர்ந்ததால், எதிர்பாராத வகையில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலகளவில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளில், அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து, இந்தியா, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில், 140 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை