உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு: அமெரிக்கா

வாஷிங்டன்:''சர்வதேச அரங்கில், இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது,'' என, அமெரிக்க அதிபரின் பருவநிலைக்கான சிறப்பு துாதர் ஜான் கெர்ரி புகழாரம் சூட்டி உள்ளார்.

அமெரிக்காவில், கடந்த ஜனவரி மாதம், நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒரு குழு அமைத்து உத்தர விட்டார். பின், அந்த குழுவுக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு துாதராக, ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த ஒரு மாநாட்டில், ஜான் கெர்ரி பங்கேற்று உரையாற்றினார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற அந்த மாநாட்டில் ஜான் கெர்ரி கூறியதாவது:சிறந்த நாடாக விளங்கும் இந்தியா, இன்று சர்வதேச அரங்கில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதர நாடுகளுடன் நல்லுறவு வைத்திருக்கும் இந்தியா எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகள், எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படும் நன்மைகளை தீர்மானிக்கும்.

பருவ நிலை மாற்றம் தொடர்பான அச்சுறுத்தலுக்கு எதிராக, நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கொரோனாவுக்கு எதிராக, எப்படி நாம் நடவடிக்கைகளை எடுக்கிறோமோ, அதேபோன்ற துரிதமான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.தொழில்களில், பாலின சமத்துவத்திற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் பருவ நிலை நெருக்கடியால், அதிக அளவிலான பெண்கள், மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் நன்கு அறிவோம்.எனவே பெண்கள் தொழிலில் செழித்து வளர்ச்சியடைய, அவர்களுக்கு ஏதுவான வேலை கலாசாரத்தை நாம் கட்டமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை