பிரேசிலின் ஒரு நாள் கொரோனா பலி முதல் முறையாக 4,000 பேரை கடந்துள்ளது

தினமலர்  தினமலர்
பிரேசிலின் ஒரு நாள் கொரோனா பலி முதல் முறையாக 4,000 பேரை கடந்துள்ளது

சாவ் பாலோ:பிரேசிலின் ஒரு நாள் கொரோனா பலி எண்ணிக்கை, முதல் முறையாக, நேற்று, 4,000 பேரை கடந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசில், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில், அமெரிக்காவிற்கு அடுத்ததாக, இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்நாட்டின் மருத்துவ மனை களில், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் குவிந்துள்ளனர். அதேநேரத்தில், சுகாதாரத் துறைக்கான கட்டமைப்பு போதிய அளவில் இல்லை.

பல்வேறு தளர்வு

இருப்பினும், இங்கு உள்ள மாகாண கவர்னர்கள், மாநகர மேயர்கள் பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளனர்.இதனால், தற்போது வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதுடன், உயிரிழப்பு எண்ணிக்கையும் கடுமையாக உயர்கிறது. உலக நாடுகளில், அமெரிக்கா மற்றும் பெருவில் மட்டுமே, ஒரே நாளில், 4,000 பேருக்கு மேல் இறப்புகள் பதிவாகி வந்தன.

இந்நிலையில், முதல் முறையாக பிரேசிலின் ஒரு நாள் உயிரிழப்பு நேற்று, 4,195 ஆக பதிவாகி உள்ளது. இதில், மக்கள் தொகை அதிகமுள்ள சாவ் பாலோ மாகாணத்தில் மட்டும், 1,400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.உயிரிழப்புகள் அதிகரிப்பால், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை, 3.40 லட்சத்தை கடந்துள்ளது.

மிகப்பெரும் ஆபத்து



இது குறித்து, அந்நாட்டின் சுகாதார கொள்கை ஆய்வு நிறுவன நிர்வாக இயக்குனர் மிகுவல் லாகோ கூறியதாவது:நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். அவர், கொரோனா வைரசின் ஆபத்தை உணராமல், பொருளாதாரத்தை மட்டுமே கருத்தில் கொள்வது, மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் அனைத்து மாகாண மருத்துவமனைகளின், 90 சதவீத படுக்கைகளிலும், கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளிலும் பற்றாக் குறை உள்ளது.நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 3 சதவீதத்திற்கு குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை தளர்த்தியுள்ளது, பாதிப்பை மேலும் பலமடங்கு அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை