கைகொடுத்த தோனி ‘அட்வைஸ்’ * மகிழ்ச்சியில் ‘யார்க்கர்’ நடராஜன் | ஏப்ரல் 07, 2021

தினமலர்  தினமலர்
கைகொடுத்த தோனி ‘அட்வைஸ்’ * மகிழ்ச்சியில் ‘யார்க்கர்’ நடராஜன் | ஏப்ரல் 07, 2021

சென்னை: ‘‘தோனி கொடுத்த ‘அட்வைஸ்’ பயனுள்ளதாக இருந்தது,’’ என ‘யார்க்கர்’ நடராஜன் தெரிவித்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர், தமிழகத்தின் நடராஜன் 30. கடந்த ஐ.பி.எல்., தொடரில் அதிக ‘யார்க்கர்’ பந்துகளை வீசிய பவுலர் ஆனார். இவர் 71 ‘யார்க்கர்’ வீசினார். தோனி, டிவிலியர்ஸ் என முன்னணி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடும், இவர் கூறியது:

தோனி போன்ற வீரர்களிடம் பேசியது பெரிய விஷயம். எனது ‘பிட்னஸ்’ குறித்தும், பவுன்சர்களை மெதுவாக வீசுவது, பந்து வீச்சில் வேறுபாடு காட்டுவது எப்படி எனவும் அவர் ‘அட்வைஸ்’ செய்தார். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கடந்த சீசனில் எனது பந்தில் தோனி அடித்த சிக்சர் 102 மீ., துாரத்துக்கும் அதிகமாக சென்றது. அடுத்த பந்தில் தோனியை அவுட்டாக்கினேன். எனினும், முதல் பந்தை எப்படி வீசினேன் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தோனியிடம் பேசினேன். 

பெங்களூரு அணிக்கு எதிரான ‘எலிமினேட்டர்’ போட்டியின் போது தான், அப்பா ஆனேன். ஒருபுறம் எனது குழந்தை, மறுபக்கம் முக்கியமான போட்டியில் டிவிலியர்ஸ்சை அவுட்டாக்கினேன். இது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் குழந்தை பிறந்தது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. 

போட்டியில் வென்ற பிறகு எல்லோரிடமும் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் கேப்டன் வார்னர், பரிசளிப்பு நிகழ்ச்சியில் தெரிவித்து விட்டார்.

இவ்வாறு நடராஜன் கூறினார்.

மூலக்கதை