கோப்பை வென்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம் | ஏப்ரல் 07, 2021

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம் | ஏப்ரல் 07, 2021

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. செஞ்சுரியனில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு இமாம்–உல்–ஹக் (57) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய பகார் ஜமான் (101) சதம் கடந்தார். முகமது ரிஸ்வான் (2), சர்பராஸ் அகமது (13) ஏமாற்றினர். மறுமுனையில் அசத்திய கேப்டன் பாபர் ஆசம் 94 ரன் விளாசினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 320 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் கேஷவ் மகராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ராம் (18), ஸ்முட்ஸ் (17), கேப்டன் டெம்பா பாவுமா (20) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய ஜானிமன் மலான் (70), கைல் வெர்ரெய்ன் (62), அன்டில் பெலுக்வாயோ (54) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 292 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிதி, முகமது நவாஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.  ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் வென்றார். தொடர் நாயகன் விருதை பாகிஸ்தானின் பகார் ஜமான் கைப்பற்றினார்.

மூலக்கதை