பிரான்சில் லாக்டவுன்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு?

தினகரன்  தினகரன்
பிரான்சில் லாக்டவுன்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு?

பாரீஸ்: கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தாமதமாகலாம் என பாரீசில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், பிரான்சில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து அந்நாட்டு அரசு தற்போது ஆலோசித்து வருகிறது. இதனிடையே பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் மே 23ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை நடத்த முடியாது. எனவே போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து, பிரெஞ்ச் ஓபன் நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பிரான்ஸ் அரசும், போட்டி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து பிரெஞ்ச் டென்னிஸ் பெடரேஷனின் தலைவர் கில்ஸ் மோர்ட்டன் கூறுகையில், ‘‘முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் நிச்சயம் போட்டிகளை தள்ளி வைக்க நேரிடும். தற்போதைய அட்டவணைப்படி மே 23ம் தேதி போட்டிகளை துவக்க வேண்டும். அதற்கு முன்னதாக தகுதி சுற்று போட்டிகள் நடத்த வேண்டும். இதற்காக வரும் வீரர்கள், வீராங்கனைகளை முதலில் 14 நாட்கள் தனிமையில் தங்க வைக்க வேண்டும். அதன் பின்னர் வெளி தொடர்புகளை முற்றிலும் தவிர்த்து, ஓட்டல் அறைகளில் இருந்து அவர்களை நேராக மைதானத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். போட்டி முடிந்த பின்னர் மீண்டும் அதே போல, அறைக்கு அழைத்து வர வேண்டும். மேலும் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அனுமதிக்கப்பட்ட குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்களுடன்தான் போட்டிகளை நடத்துவோம் என அரசிடம் கூறியிருக்கிறோம். எனவே முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், போட்டி தேதிகளை தள்ளி வைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் தற்போது வரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் (மே 23), போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். அந்த நடவடிக்கைகளை நிறுத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை