டாப்-ஆர்டரில் ஸ்மித் விளையாடுவார்: ரிக்கி பாண்டிங் பேட்டி..!

தினகரன்  தினகரன்
டாப்ஆர்டரில் ஸ்மித் விளையாடுவார்: ரிக்கி பாண்டிங் பேட்டி..!

புதுடெல்லி: ஸ்டீவ் ஸ்மித், முதல் 3 வீரர்களில் ஒருவராக களமிறக்கப்படுவார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற ஐபிஎல் கிரிக்கெட்  திருவிழா, நாளை மறுநாள் துவங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் டெல்லி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், ‘‘இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெற்றால், அவர் முதல் 3 வீரர்களில் ஒருவராக களமிறங்குவார். இப்போட்டியில் மட்டுமல்ல, இத்தொடர் முழுவதுமே அவர் டாப்-ஆர்டரில்தான் விளையாட உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சார்கள் காகிஸ்டோ ரபாடா மற்றும் அன்ரிட்ஜ் நோர்ட்ஜ் ஆகியோர் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். ஸ்மித்தின் திறமையை பற்றி கூறத் தேவையில்லை. இந்த முறை முழு நம்பிக்கையுடன் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறோம்’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை