சென்னை அணியை வெல்ல முடியுமா * டில்லி கேப்டன் ரிஷாப் நம்பிக்கை | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
சென்னை அணியை வெல்ல முடியுமா * டில்லி கேப்டன் ரிஷாப் நம்பிக்கை | ஏப்ரல் 06, 2021

மும்பை: ‘‘சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏதாவது வித்தியாசமாக செய்து வெற்றிக்கு முயற்சிப்பேன்,’’ என ரிஷாப் பன்ட் தெரிவித்தார்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் ஏப். 9–மே 30ல் நடக்கவுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, பெங்களூருவை சந்திக்கவுள்ளது. ஏப். 10ல் மும்பை வான்கடே மைதானத்தில் ‘சீனியர்’ தோனியின் 39, சென்னை அணி, ‘ஜூனியர்’ ரிஷாப் பன்ட்டின் 23, டில்லியை எதிர்கொள்கிறது.

இதுகுறித்து டில்லி அணி கேப்டன் ரிஷாப்  கூறியது:

கேப்டனாக எனது முதல் போட்டியில் தோனியின் சென்னை அணியை எதிர்த்து களமிறங்குகிறேன். இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இப்போட்டி எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். தோனியிடம் கற்றது, எனது அனுபவம் என அனைத்தையும் கலந்து, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்காக ஏதாவது செய்ய முயற்சிப்பேன்.

டில்லி அணி இதுவரை ஐ.பி.எல்., கோப்பை வென்றது இல்லை. இம்முறை சாதிக்க முடிந்தளவுக்கு போராடுவேன். கடந்த சில ஆண்டுகளாக ஒரு அணியாக அனைத்து வீரர்களும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறோம்.

இம்முறையும் வீரர்கள் 100 சதவீத திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். பயிற்சியாளர் பாண்டிங், கடந்த சில ஆண்டுகளாக வியக்கத்தக்க வகையில் கைகொடுக்கிறார். அணிக்கு தேவையான புத்துணர்ச்சியை கொண்டு வருகிறார். இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். சக வீரர்கள் துணையுடன் இந்த சீசனில் கோப்பை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை