சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு | ஏப்ரல் 06, 2021

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி கேப்டனாக களமிறங்கி வருகிறார். இதுவரை 2010, 2011, 2018 என மூன்று முறை கோப்பை வென்று தந்தார். தவிர சென்னை அணிக்காக பங்கேற்ற 11 தொடர்களில், 10ல் அடுத்த சுற்றுக்கு கொண்டு சென்றார். கடந்த முறை மட்டும் 7வது இடம் பெற்றது சென்னை.

7000 ரன்

தற்போது ஐந்து மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் களமிறங்குகிறார் தோனி. கடந்த 2020 ல் 14 போட்டியில் தோனி 200 ரன்கள் மட்டும் எடுத்த இவர், வரும் தொடரில் ரன் வேகம் காட்டலாம். தற்போது 331 போட்டிகளில் 6821 ரன்கள் எடுத்துள்ளார். இம்முறை 179 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டலாம்.

200 சிக்சர்

ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் சிக்சர் அடிப்பதில் வல்லவர் தோனி. வரும் தொடரில் கூடுதலாக 14 சிக்சர் அடிக்கும் பட்சத்தில், சென்னை அணிக்காக 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெறுவார்.

150 ‘அவுட்’

விக்கெட் கீப்பர் பணியை பொறுத்தவரையில் தோனி மின்னல் வேகத்தில் செயல்படுவார். இந்தியா, சென்னை அணிக்காக பலமுறை இதை நிரூபித்தார். 14வது சீசனில் கூடுதலாக 2 வீரர்களை ‘அவுட்’ செய்ய உதவும் பட்சத்தில், ஐ.பி.எல்., தொடரில் 150 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த முதல் விக்கெட் கீப்பர் என சாதனை படைக்கலாம்.

மூலக்கதை