‘கவுன்டி’ போட்டியில் விஹாரி | ஏப்ரல் 06, 2021

தினமலர்  தினமலர்
‘கவுன்டி’ போட்டியில் விஹாரி | ஏப்ரல் 06, 2021

புதுடில்லி: இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ போட்டியில் இந்தியாவின் ஹனுமா விஹாரி விளையாட உள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் ‘மிடில்–ஆர்டர்’ பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி 27. இந்தியாவுக்காக 12 டெஸ்டில் (624 ரன்) விளையாடி உள்ள இவர், ஐ.பி.எல்., அரங்கில் ஐதராபாத் (2013, 2015), டில்லி (2019) அணிகளுக்காக பங்கேற்றார். சமீபத்தில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த ஒரு அணியும் இவரை தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் விஹாரி, இங்கிலாந்தில் நடக்கவுள்ள ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் தொடரில் ‘வார்விக்சயர்’ அணி சார்பில் விளையாடப் போவதாக கூறப்படுகிறது. இது, அடுத்து நடக்கவுள்ள டெஸ்ட் தொடர்களுக்கு சிறப்பான முறையில் தயாராக உதவலாம். ஆனால் இதுகுறித்து ‘வார்விக்சயர்’ அணி நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இங்கிலாந்தில் நடத்தப்படும் ‘கவுன்டி’ போட்டியில் விஹாரி விளையாட உள்ளார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இவர், குறைந்தபட்சம் 3 போட்டிகளில் பங்கேற்பார். வாய்ப்பு கிடைத்தால் கூடுதலாக ஒரு சில போட்டிகளில் விளையாடலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,’’ என்றார்.

மூலக்கதை