8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு

புதுடெல்லி: எட்டு மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டு வருவதால், அன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில், தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் பாதிப்பு 57,000 ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பு 29 லட்சத்தைக் கடந்துள்ளது.



நாடு முழுவதும் 1,25,89,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இருப்பினும், மீண்டும் முழு ஊரடங்கு இருக்காது என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாளை மறுநாள் (ஏப்.

8) எட்டு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.



இந்தியாவில் ஏற்படும் கொரோனா பாதிப்பின் 80 சதவீதம் மேற்கண்ட மாநிலங்களில்தான் அதிகமாக உள்ளதால், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இந்த ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி 7 கோடி பேருக்கு மேல் போடப்பட்டுள்ள நிலையில், மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘25 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை