சட்டீஸ்கர் மாநில வனப்பகுதியில் நக்சல் தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டீஸ்கர் மாநில வனப்பகுதியில் நக்சல் தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு

* 300 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது ‘அட்டாக்’
* ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

பிஜாப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் பதிலடியில் 2 பெண் நக்சல் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில வனப்பகுதியில் நக்சல்கள் முகாமிட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான சதி செயல்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி நக்சல் தடுப்பு பிரிவு படையின் வாகனத்தை நக்சல் கும்பல் வெடிவைத்து தகர்த்தியதில் ஐந்து வீரர்கள் பலியாகினர்.

அதையடுத்து பிஜாப்பூர் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (சிஆர்பிஎப்) அடங்கிய கூட்டுக் குழு, வெள்ளிக்கிழமை இரவு தெற்கு பஸ்டர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தியது.

சுமார் 2000 பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இந்த தேர்தல் வேட்டையில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை சுக்மா - பிஜப்பூர் எல்லையில் உள்ள டாரெம் பகுதியில் நக்சல் பிரிவின் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ (பிஎல்ஜிஏ) என்ற அமைப்பை சேர்ந்த கும்பல் பாதுகாப்பு படையினர் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தியது.

இருதரப்புக்கும் இடையே நடந்த 6 மணி நேரம் தொடர் துப்பாக்கிச்சூட்டில் நேற்றிரவு 5 வீரர்கள் நக்சல் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.

மூன்று பேர் சட்டீஸ்கர் போலீசார் என்று அறிவிக்கப்பட்டது. காயமடைந்த 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவோடு இரவாக பாதுகாப்பு படையினரால் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையே மாயமான 15க்கும் மேற்பட்ட வீரர்களை மீட்க 9 ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் இன்று அதிகாலை முதல் மாயமானதாக கூறப்படும் வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த பகுதியில் போதுமான தகவல் தொடர்பு வசதிகள் இல்லாததால், மீட்புப்பணிகள் தாமதமான நிலையில்,

இன்று பிற்பகல் வெளியான செய்தியில், நக்சல் தாக்குதலில் மொத்தம் 24 வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்ததாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 10 பேர் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளன. இதுகுறித்து மாநில நக்சல் தடுப்பு பிரிவு டிஐஜி ஓப்பால் கூறுகையில், ‘பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் கோப்ரா பட்டாலியன், டிஆர்ஜி மற்றும் சிறப்பு படை ஆகியவற்றின் கூட்டுக் குழுவானது நக்சல் தேடுதல் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் சென்றது.

பிஜாப்பூர் மாவட்டத்தின் தாராராம், உஸ்யூர், பமேத், சுக்மா பகுதிகளில் 1,500 வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள்  சென்றனர்.

அப்போது பாதுகாப்பு படை கூட்டு குழுவுக்கும், மறைந்திருந்த நக்சல் கும்பலுக்கும் கிட்டதிட்ட 4 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்தனர்.

காயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டனர். 200 முதல் 300 நக்சல்கள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தினர்.

20க்கும் மேற்பட்ட நச்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’ என்றனர்.

நச்சல் தாக்குதலில் 24 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நக்சல் தாக்குதல் சம்பவத்தில் 24 வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்த சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டீஸ்கர் முதல்வர் பாகேல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல் செய்தியையும் வௌியிட்டுள்ளனர்.

3 ஆண்டில் 113 வீரர்கள் பலி
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, நாடு முழுவதும் நக்சல் பாதிப்பு சம்பவங்கள் குறித்து மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு மத்திய இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அளித்த பதிலில், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, 2018ல் 833 நக்சல் சம்பவங்கள் நடந்தன. 2019ல் 670 ஆகவும், 2020ல் 665 ஆகவும் இருந்தது.

சட்டீஸ்கரில் 2018 முதல் 2020 வரை 970 நக்சல் சம்பவங்கள் நடந்துள்ளன. மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் 113 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சட்டீஸ்கரில் மட்டும் 2019ல் 263 நக்சல் சம்பவங்கள் பதிவாகின. 2019ல் நக்சல் தாக்குதல்களில் சட்டீஸ்கரில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

2020ல் 36 வீரர்கள் உயிரிழந்தனர்.

தற்போது 2021ல் 24 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

.

மூலக்கதை