கால்வாயை ஒட்டி அடர்வனம் அமைப்பு

தினமலர்  தினமலர்
கால்வாயை ஒட்டி அடர்வனம் அமைப்பு

அடையாறு - அடையாறு, பக்கிங்ஹாம் கல்வாயை ஒட்டி, 1,400 மரக்கன்றுகள் நட்டு, அடர்வனம் அமைக்கப்பட உள்ளது. அடையாறு மண்டலம், 175வது வார்டு, கெனால் பேங்க் சாலையில், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. இதை ஒட்டி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 1,640 அடி நீளம், 15 அடி அகலத்தில் இடம் உள்ளது.இதில், பாதைக்கான இடம் போக, மீதமுள்ள, 6 அடி அகலத்தில், 1,400 மரங்கள், செடிகள் அடங்கிய, அடர்வனம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அனுமதியுடன், மாநகராட்சி, பசுமை பூமி அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. நாவல், பூவரசு, புங்கை உள்ளிட்ட, 8 வகை மரக்கன்றுகள் மற்றும் மருதாணி, நொச்சி உள்ளிட்ட, 6 வகை செடிகள் நடப்பட உள்ளன. மரக்கன்றுகள், 7 அடி இடைவெளியில் நடப்படும். இதற்கு இடையில், இரு செடி வகைகள் வீதம் நடப்படும். மொத்தம், 1,400 மரக்கன்றுகளில், முதற்கட்டமாக, 650 மரக்கன்றுகள் நடப்படும்.தற்போது, மண் சமப்படுத்தும் பணியை, மாநகராட்சி செய்கிறது. ஓரிரு நாளில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உதவியுடன், மரக்கன்றுகள் நட, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு, பசுமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை