புறநகர் ரயில்களில் ஒலிபெருக்கி அறிவிப்பு அவசியம்

தினமலர்  தினமலர்
புறநகர் ரயில்களில் ஒலிபெருக்கி அறிவிப்பு அவசியம்

சென்னை - புறநகர் மின்சார ரயில்களில், கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி அறிவிப்பு அவசியம் என, பயணியர் வலியுறுத்திஉள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு உட்பட, ஐந்து வழித்தடங்களில் தினமும், 660 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது புதிய பாதை பணி நடப்பதால், செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை நிலையம் இடையே, வரும், 13ம் தேதி வரை புறநகர் ரயில் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் தினமும், 160 மின்சார ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் உரிய நேரத்தில் இயக்கப்படாததால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. அதே போல், இடையிடையே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். ரயில்கள் எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாததால், ரயில் நிலையங்களில் மட்டுமின்றி, புறநகர் ரயில்களிலும், பயணியர் கூட்டம் அலை மோதுகிறது.

சிலர், படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணிப்பதால், விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து, பயணியர் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து நிலையங்களிலும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மூலக்கதை