ஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும்

தினமலர்  தினமலர்
ஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும்

திருச்சி பொதுக்கூட்டத்தில், ஏழு உறுதிமொழிகள் என்ற பெயரில்,10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை, ஸ்டாலின் வெளியிட்டார்.


பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி - சுகாதாரம், சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். அதன்படி, தனிநபர் வருமானம் ஆண்டுக்கு, 4 லட்சத்திற்கு மேலாக உயர்த்தப்படும்; ஆண்டுக்கு, 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, 35 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்தப்படும் என்றெல்லாம் தெரிவித்தார். இல்லத்தரசிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் தருவதாக சொன்னது, 'ஹைலைட்'. தமிழகத்தின் பொருளாதார நிலை தெரிந்த நிபுணர்களோடு பேசினோம். ஸ்டாலின் சொன்ன ஒவ்வொரு உறுதிமொழியிலும் உள்ள குறைபாடுகள் என்ன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
ஜி.டி.பி.,தமிழகத்தின், ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது, 18.9 லட்சம் கோடிரூபாயாக உள்ளது. கொரோனாவுக்கு முன்பு, 2016 முதல், 19 வரையான, நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும், 9 சதவீதம் இருந்துள்ளது.இதே வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், அடுத்த, 10 ஆண்டுகளில், தமிழகத்தின் ஜி.டி.பி., 44.7 லட்சம் கோடியை எட்டும்.


கடந்த, 2011--12 முதல் 2020-21 வரையான காலகட்டத்தில் நம் ஜி.டி.பி., 7.5 லட்சம் கோடியில் இருந்து, 18.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இரண்டரை மடங்கு உயர்வு. இந்த மதிப்பீடு படி பார்த்தாலும், 2030 --31இல், நம் ஜி.டி.பி., 47 லட்சம் கோடியாக இருக்கும். ஆனால், வெறும், 35 லட்சம் கோடியாக உயர்த்துவேன் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால், 6.5 சதவீத வளர்ச்சியைத் தான் ஏற்படுத்த முடியும் என்று ஸ்டாலின் சொல்வதாக அர்த்தம். அதாவது தற்போதைய, 9 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக வளர்ச்சியைக் குறைப்பேன் என்கிறாரா?

வேலைவாய்ப்பு
த மிழ்நாட்டின், 9 சதவீத கூட்டு சராசரி வளர்ச்சியில், 6 சதவீதத்தை ஏற்கனவே உள்ள தொழில் துறை வழங்கப் போகிறது. மீதமுள்ள, 3 சதவீத வளர்ச்சிக்குத் தான் முதலீடு செய்யப்படும்.அதாவது, அடுத்த, 10 ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக, 93,538 கோடி ரூபாய் மட்டும் முதலீடு செய்யப்படும்.

ஆனால், 2019-20ல், தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஏற்கனவே, 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தநிறுவனங்களுக்கு, 35 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது. அதாவது, 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு. அதன்மூலம், 17.5 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஸ்டாலினோ,ஒவ்வோராண்டும், 93,538 கோடி முதலீட்டில், 10 லட்சம் வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்கிறார். உண்மையில், 2017--18ம் ஆண்டிலேயே, தமிழகத்தில், 13.5 லட்சம் வேலைகள்உருவாக்கப்பட்டன என்பது வரலாறு.

தனிநபர் வருவாய்
தற்போதைய வளர்ச்சி விகிதம் அப்படியே தொடரும் பட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளில், நம் மாநிலத்தில் தனிநபர் ஆண்டு வருமானம், 4,78,261 ரூபாயாக இருக்கும். ஆனால், தி.மு.க., தலைவரோ, 4 லட்சம் ரூபாய் ஆக்குவேன் என்கிறார்.இல்லத்தரசிக்கு 1,000 ரூபாய்குடும்பத் தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் என்பது ஏற்கனவே பேசப்பட்ட, 'யுனிவர்சல் பேசிக் இன்கம்' திட்டத்தின் உள்ளூர் வடிவம். லோக்சபா தேர்தலில், ராகுலும் இதேபோன்ற திட்டத்தை அறிவித்தார்.

தமிழகத்தின் குடும்ப அட்டைதாரர்களில், 2.1 கோடி பேருக்கு இந்தப் பணம் கொடுக்கப்படும் என்பது தான் தற்போதைய புரிதல். திட்டம் அமலாகும் போது, அதற்கு விதிக்கப்படும் தகுதிவடிகட்டல்களை யாரும் இப்போது சொல்ல மாட்டார்கள். அதாவது, மாத வருவாய், 6 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும், அல்லது வேறு எந்த திட்டத்திலும் பயனாளியாக இருக்கக் கூடாது என்பதை போன்ற உப தகுதிகள் வைக்கப்படும்.

இறுதியாக, 1,000 ரூபாய் பெறுவோர் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அ.தி.மு.க., அரசில் செயல்படுத்தப்படும் ஒருசில திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அந்தத் தொகையை, 1,000 ரூபாய் திட்டத்துக்கு மடைமாற்றி விடவும் கூடும்.ஆந்திர மாநிலத்தில் இதேபோன்ற திட்டம் இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு சந்திரபாபு நாயுடு மாதம், 2,000 ரூபாய் கொடுத்து வந்தார். ஜெகன்மோகன் ரெட்டி அதை, 3,000 ரூபாயாக உயர்த்துவேன் என்றார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தும் இதற்கு தான் போட்டார்.

ஆனால், படிப்படியாக உயர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான், 3,000 தர முடியும்; இப்போது, 250 ரூபாய் உயர்த்தி தருகிறேன், என்று சொல்லி, 2,250 மட்டுமே கொடுத்து வருகிறார். ஆக,தேர்தல் நேரத்தில் நம் தலைவர்கள் பேசுவதற்கும், ஆட்சிக்கு வந்தபின் சந்திக்கிற எதார்த்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மூலக்கதை