இது உங்கள் இடம் : தமிழகம் காணாமல் போகும்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : தமிழகம் காணாமல் போகும்!

பா.-விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனித்து நின்று வெற்றி பெற முடியாதவரே, கூட்டணி சேருவர். அரசியல் கட்சிகளும், இதையே தான் செய்கின்றன. தனித்து நின்று, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்று தெரியும் போது, கூட்டணி சேர்கின்றன. அதெல்லாம் சரி... கூட்டணி அமைக்கும் கட்சிகளின் கொள்கையாவது ஒன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், ஒன்றுமில்லை. அவர்களின் ஒரே கொள்கை, பொதுப்பணத்தை வாரிச் சுருட்டிக் கொள்வது தான்.


தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. அது எப்படி, அவ்விரு கட்சிகளிடம் மட்டும் இவ்வளவு பணம் சேர்ந்தது என்பதைப் பற்றி, நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்க்கிறோமா... அத்தனையும், நம் பணம் என்பதை உணர்ந்திருக்கிறோமா! மக்கள் நலத்திட்டங்களில் கொள்ளையடித்த பணத்தை மூலதனமாக வைத்து தான், தேர்தல் கூட்டணிப் பேச்சு நடக்கிறது. எளிமையும், ஓரளவுக்கு நேர்மையும் உடைய கம்யூனிஸ்ட்களே, கடந்த தேர்தலின்போது, தி.மு.க.,விடம், பல கோடி ரூபாய் பெற்றனர் என்றால், வேறு என்ன சொல்வது! இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த, அத்தனை சிறு கட்சிகளும், நிச்சயம், 'பெட்டி' வாங்கியிருக்கும்.

ஆளுங்கட்சியிடம் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு கட்சிக்கு, 23 தொகுதிகளுடன், 200 'ஸ்வீட் பாக்ஸ்' வழங்கப்பட்டுள்ளதாம். ஒரு ஸ்வீட் பாக்ஸ் என்றால், எத்தனை கோடி ரூபாய் எனத் தெரியவில்லை. தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, 'பொருளாதார நிலை காரணமாகவே, கூட்டணி பேச வேண்டியுள்ளது' என, 'போட்டு' உடைத்துள்ளார். கூட்டணி என்பதால், பணத்தால் தான் தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள், மக்களுக்கு சேவை செய்ய, கட்சித் துவங்கவில்லை.


அரியணை ஏறி, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக, ஆலாய்ப் பறக்கின்றனர். ஏமாந்த சோணகிரிகளாக நாம் இருப்பதால் தான், இந்தத் திராவிடக் கட்சிகள் மீண்டும், மீண்டும் நம் தலையில் மிளகாய் அரைக்கின்றன. திராவிடக் கட்சிகள் தரும் சொற்பப் பணத்திற்கு ஆசைப்பட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் காணாமல் போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! எனவே, வாக்காளர்களாகிய நாம் விழித்தெழுவோம்; நல்லவருக்கு ஓட்டு அளிப்போம்.

மூலக்கதை