மல்லுக்கட்டு! எந்த தொகுதி, எந்த கட்சிக்கு? கட்சியினர் மத்தியில் காரசாரம்

தினமலர்  தினமலர்
மல்லுக்கட்டு! எந்த தொகுதி, எந்த கட்சிக்கு? கட்சியினர் மத்தியில் காரசாரம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில், எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு, கூட்டணிக்கட்சிகளும் மல்லுக்கட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், இக்கூட்டணிகளில், எந்தக்கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற, பரபரப்பு, அரசியல் கட்சியினரிடம் மட்டுமின்றி, வாக்காளர்களிடமும் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., கூட்டணிமாவட்டத்தில், கடந்த தேர்தலில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கயத்தில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த தனியரசு வென்றார்.உடுமலை எம்.எல்.ஏ.,வாக அமைச்சர் ராதாகிருஷ்ணனும், அவிநாசி எம்.எல்.ஏ.,வாக சபாநாயகர் தனபாலும் உள்ளனர்.கடந்த முறை, கூட்டணி அமைக்காமல், அ.தி.மு.க., போட்டியிட்டது. அ.தி.மு.க., வென்ற தொகுதிகளில், போட்டியிட்டால், வெற்றி பெறுவது எளிது என்ற அடிப்படையில், பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினரும், இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றனர்.இதற்கு காரணம், இத்தொகுதிகளில், தங்களுக்கும் ஓட்டு வங்கி உள்ளது என்பதுதான்.
ஆனால், இவற்றை விட்டுத்தரக் கூடாது என்பது, அ.தி.மு.க., தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.மேலும், மடத்துக்குளம், தாராபுரம் போன்ற தொகுதிகளிலும் போட்டியிட, அ.தி.மு.க.,வினர் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளும், இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன.
தி.மு.க., கூட்டணிகடந்த முறை, மடத்துக்குளத்தில் தி.மு.க., மற்றும் தாராபுரத்தில் காங்., வேட்பாளரும் வென்றனர். மாவட்டத்தில் உள்ள பிற ஆறு தொகுதிகளை, தி.மு.க., கூட்டணியால் வெல்ல இயலவில்லை.இந்த முறை, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வெல்ல, இக்கூட்டணி முனைப்பு காட்டுகிறது.
திருப்பூர் மாநகரப்பகுதிகள் இடம்பெற்ற, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் மீது கம்யூ., கட்சிகள் குறி வைத்துள்ளன. இதற்கு தி.மு.க., சம்மதிக்குமா என்பது தெரியவில்லை.ஏற்கனவே தி.மு.க., வென்றுள்ளதால் மடத்துக்குளம் தி.மு.க.,வுக்கும், காங்., வென்றுள்ளதால் தாராபுரம் காங்.,குக்கும் ஒதுக்கப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.பல்லடம்,
அவிநாசி, காங்கயம், உடுமலை ஆகியன தி.மு.க., கூட்டணியில், எந்தக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது,விரைவில் தெரியவரும்.மக்கள் நீதி மய்யம்ம.நீ.ம., கூட்டணியில், ச.ம.க., - ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகளுக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், ம.நீ.ம., பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட்டாலும், ச.ம.க., - ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகளும், இங்குள்ள ஓரிரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அ.ம.மு.க., கூட்டணிஅ.ம.மு.க., கூட்டணியில், ஓவைசி கட்சி கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், இக்கூட்டணி, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மூலக்கதை