திராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது

தினமலர்  தினமலர்
திராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது

'திராவிடம்' என்ற சொல்லுக்கு, பெரியார் என, அழைக்கப்படும், ஈ.வெ.ராமசாமி அரசியல் அர்த்தம் கொடுத்தார். எனினும், அண்ணாதுரை தான், அந்த சொல்லை பிரசாரம் செய்து வழக்கப்படுத்தி வளர்த்தார். அண்ணாதுரை தான், திராவிடத்தை அரசியல் களத்திற்கும் கொண்டு வந்தார்.

திராவிட அரசியலின் முக்கிய சாதனைகள் - மொழி மற்றும் கலாசார அடையாளத்தை வலுப்படுத்தியது; முற்போக்கு சிந்தனையை பரப்பியது; சமூக நீதியை உறுதிப்படுத்தியது மற்றும் மாநில சுயாட்சியை நிலைநாட்டியது. இதை அண்ணாதுரை முதல், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை, அனைத்து திராவிட கழக தலைவர்களும் செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா தன் ஒவ்வொரு உரையின் போதும், அண்ணாவின் பெயரை குறிப்பிட தவறியதில்லை. அவர் ஒரு போதும், சாதி வேற்றுமையை கட்சியினரிடையே காட்டியதில்லை. கட்சியின் பொதுச் செயலராக பதவி ஏற்றபோதும், திராவிடம் என்ற கொள்கையை, அவர் முழு அர்த்தத்தில் கடைப்பிடித்தார்.

சாதிகள் அற்ற திராவிட சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்தார். இந்த அளவிலான உறுதிப்பாடும், ஆற்றலும் கொண்டிருந்ததால், திராவிட தத்துவத்தை நிலைநிறுத்துவதில், ஜெயலலிதா முக்கிய பங்காற்றினார். மத தீண்டாமை இல்லைஇந்த தலைவர்கள், திராவிட சிந்தனையில் இருந்து விலகாமல் இருந்ததால், தமிழ்நாடு மதச்சார்பற்ற, நல்லிணக்கம் நிலவும் மாநிலமாக இருந்தது. மதவேறுபாடுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. தமிழால் சமூகம் இணைந்திருந்தது. அதனால், தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் நிகழவில்லை; மத தீண்டாமை இல்லை. அதில், அரசியல்வாதிகள் புகுந்து விளையாடவும் இல்லை.


ஆனால், இ.பி.எஸ்., முதல்வரான பின், திராவிடம் தேக்கநிலையை அடைந்துள்ளது. ஏனெனில், திராவிடத்தை அச்சுறுத்தும், மூன்று சக்திகளை எதிர்த்து நிற்கும் வலிமை, இ.பி.எஸ்.,சுக்கு இல்லை. முதலாவது அச்சுறுத்தல், நவீனமாக்கல் நோக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள். இரண்டாவது அச்சுறுத்தல், பா.ஜ.,வின் ஹிந்துத்துவா. மூன்றாவது அச்சுறுத்தல், தமிழ் தேசியவாதம். தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள, இ.பி.எஸ்., மத்திய ஹிந்துத்துவா கட்சியின் அழுத்தத்தை ஏற்றுக் கொள்பவராக மாறிவிட்டார்.

அ.தி.மு.க.,வையும், தேசியவாத கருத்தின் பக்கம் நகர்த்தி விட்டார். தற்போதைய அரசும், அதன் அமைச்சர்களும், ஒரு பேச்சுக்கு கூட அண்ணா துரையின் பெயரை பயன்படுத்துவ தில்லை. பெரும்பாலான பேச்சுக்களில், பிரதமர் நரேந்திர மோடியை தான் புகழ்ந்து தள்ளுகின்றனர். முந்தைய தலைவர்கள், தமிழ்நாட்டை ஒரு வலுவான மாநிலமாக வைத்திருந்தனர். தற்போது, மாநில சுயாட்சி என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது. இந்த ஆட்சி, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வந்த, மூன்று மொழி கொள்கைக்கு, 2019ல் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.பெருமளவு மக்களின் எதிர்ப்பை பெற்றிருந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை, மாநில அரசு வரவேற்றது.

தமிழக வரலாற்றிலேயே, முதல் முறையாக பாதிக்கப்பட்ட, முஸ்லிம் சகோதரர்கள் வீதிக்கு வந்து போராடினர். தராசு முள்ளை திருப்ப வேண்டும்இது, திராவிட மண்ணாக இருந்ததால், அவர்களது போராட்டத்துக்கு, ஹிந்துக்களும் ஆதரவளித்தனர். இருப்பினும், அரசியல்வாதிகள் மதமாச்சரியங்களை ஏற்படுத்தும் வேலைகளை இங்கு துவங்கி விட்டனர்.அண்மையில், பா.ஜ., நடத்திய வேல் யாத்திரை, முருகக் கடவுளை, தி.மு.க., தலைவர் தத்தெடுத்துக் கொண்ட தெல்லாம், திராவிடத்தில் இருந்து இந்த இயக்கங்கள் விலகியதையே காட்டுகின்றன. தற்போதைய நிலை, அ.தி.மு.க., ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதிலிருந்து மீள்வதற்கு, இரண்டு வழிகள் தான் உள்ளன.1தொலைநோக்கு பார்வையோடு, மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தி, சமூக பொருளாதார நிலையை நவீனப்படுத்துதல். அதற்கு தேவையானது நல்ல நிர்வாகம் தரும், தமிழ் திராவிட அரசியல் என்பதை ஏற்பது.2புதுடில்லியில் தயாரிக்கப்படும், நவீன தாராளமய சந்தை பொருளாதாரம் மற்றும் ஹிந்துத்துவாவை ஏற்பது. ஆக அடுத்த மாதம், நமக்கு ஒரு முக்கியமான பணி காத்திருக்கிறது.

பிராந்திய சக்திகளுக்கு ஆட்சி தரும் மாநில சுயாட்சி மற்றும் திராவிட அரசியலின் பால், நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவது என்ற திசையில், தராசு முள்ளை திருப்ப வேண்டும். அப்போது தான், இந்த நுாற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு, தமிழ்நாட்டை உயர்த்த முடியும்.- கே.சி.பழனிசாமி அ.தி.மு.க., - - முன்னாள் எம்.பி.,

மூலக்கதை