3வது டி20ல் இலங்கை ஏமாற்றம் தொடரை வென்றது வெ.இண்டீஸ்

தினகரன்  தினகரன்
3வது டி20ல் இலங்கை ஏமாற்றம் தொடரை வென்றது வெ.இண்டீஸ்

ஆன்டிகுவா: இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு தலா 3 போட்டிகளை கொண்ட டி20, ஒருநாள் தொடர்கள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. அனைத்து போட்டிகளும் ஆன்டிகுவாவிலேயே நடக்கின்றன. முதல் டி20ல் வெ.இண்டீசும், 2வது டி20ல் இலங்கையும் வென்று சமநிலை வகித்த நிலையில், கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் 54 ரன் (46 பந்து, 3 பவுண்டரி), ஆஷென் பண்டாரா 44 ரன்னுடன் (35பந்து, 3 பவுண்டரி, 2சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெ.இண்டீஸ் தரப்பில் பேபியன் ஆலன், கெவின் சின்க்ளேர், ஜேசன் ஹோல்டர், ஓபெத் மெக்காய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.தொடர்ந்து 20 ஓவரில் 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட வெ.இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த அணி 17.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தது. எனினும் கடைசி கட்டத்தில் ஜேசன் ஹோல்டர் - பேபியன் ஆலன் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வென்றது. ஹோல்டர் 14 ரன் (23பந்து, 1சிக்சர்), ஆலன் 21 ரன்னுடன் (6 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் லக்‌ஷன் 3, ஹசரங்கா, சமீரா தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. ஆலன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

மூலக்கதை