அரச பொறுப்பை துறந்தது ஏன்: மனம் திறந்த இளவரசர் ஹாரி

தினமலர்  தினமலர்
அரச பொறுப்பை துறந்தது ஏன்: மனம் திறந்த இளவரசர் ஹாரி

லாஸ் ஏஞ்சலஸ் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரச குடும்பத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை, இளவரசர் ஹாரி, அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான, மேகன் மார்க்கெல் ஆகியோர், மனம் திறந்து தெரிவித்து உள்ளனர்.

சர்ச்சைபிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் மகனான, இளவரசர் சார்லசின் இரண்டாவது மகன் ஹாரி. இவர், பிரபல ஹாலிவுட் நடிகையான, மேகன் மார்க்கெல்லை, 2018ல் திருமணம் செய்தார்.திருமணமானதில் இருந்தே, குடும்பத்தில் சச்சரவுகள், சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்நிலையில், அரச குடும்பப் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக, ஹாரி அறிவித்தார். அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ள ஹாரி மற்றும் மேகன் மார்க்கெல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஓபரா வின்பரேவுக்கு பேட்டி அளித்துள்ளனர்;

அதில், மேகன் கூறியுள்ளதாவது:என் தாய் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால், எனக்கு பிறக்கும் முதல் குழந்தை, கறுப்பாக இருக்குமோ என, அரண்மனையில் பலரும் பேசினர். ஆலோசனைஅரண்மனையிலும் நிறபேதம் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அரண்மனை பாரம்பரியம், நடைமுறை, மரபு என, பல கட்டுப்பாடுகள் இருந்தன.ஒரு கட்டத்தில், தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றேன். அது குறித்து, அதிகாரிகளிடம் பேசிய போது, ஆலோசனை வழங்க மறுத்தனர். அரசக் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று கூறினர்.இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, இளவரசர் ஹாரி கூறியதாவது:அரண்மனை நடைமுறை விஷயத்தில், மிகுந்த நெருக்கடியில் இருந்தேன். என் தந்தையும், என் சகோதரனும் அதுபோன்ற வலையில் சிக்கியுள்ளனர்.மேகனுக்கு உரிய சுதந்திரம், மரியாதை கிடைக்கவில்லை. அரசக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக, அவருக்கு எதிராக பல பொய்க் கதைகள் உலா வந்தன.என் மகன் பிறப்பதற்கு முன்பே, அந்தக் குழந்தையின் நிறம் குறித்து பலர் பேசினர். மேலும், அந்தக் குழந்தைக்கு, இளவரசர் அல்லது இளவரசி என்ற பட்டம் கிடைக்காது என்று கூறினர். நான் பட்டம் குறித்து கவலைப்படவில்லை. பட்டம் இல்லாததால், பாதுகாப்பும் வழங்கப்படாது.

என் குழந்தையின் பாதுகாப்பு குறித்து நான் தானே கவலைப்பட முடியும்.அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கூறியதுமே, எனக்கான நிதியைக் குறைத்தனர்; பாதுகாப்பும் குறைக்கப்பட்டது. என் பாட்டியான, ராணி இரண்டாம் எலிசபெத் மீதும், என் தந்தை, சகோதரன் உட்பட அனைவர் மீதும், இன்றும் நல்ல மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் மீதான பாசம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை