பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனம் வாங்கினால் 5% தள்ளுபடி: மத்தியமைச்சா் நிதின் கட்கரி தகவல்.!!!

தினகரன்  தினகரன்
பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனம் வாங்கினால் 5% தள்ளுபடி: மத்தியமைச்சா் நிதின் கட்கரி தகவல்.!!!

டெல்லி: பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகில் தண்ணீர், காற்று, சுற்றுச்சூழல்  எல்லாமே மாசு அடைந்து வருகின்றன. கூடுதலாக ஒலி மாசுவும், மனிதர்களைப் பாதிக்கின்றது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகனங்களில் வெளிவரும் புகையின் காரணமாக காற்று மாசு ஏற்படுகிறது. இதற்காக  குறிப்பிட்ட வகை வாகனங்கள் நகரங்களுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்தியாவில் கார் மற்றும் பைக்குகளை அதை வாங்கிய தேதியில் இருந்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தான் பயன்படுத்த முடியும். அதன்பிறகு சம்மந்தப்பட்ட வாகனம் நல்ல நிலையில் இருந்தால் மேலும் 5 ஆண்டுகள்  பயன்படுத்த ஆர்.டி.ஓ அதிகாரி சான்றிதழ் அளித்து வரும் நடைமுறை தற்போது உள்ளது. இதற்கிடையே, தற்போது பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகம் ஆகத் தொடங்கியிருப்பதால் 15 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ்.4 அல்லது  அதற்கு குறைவான வெர்ஷன் கொண்ட என்ஜின் உடைய வாகனங்களை மறுபதிவு செய்து ஓட்ட அனுமதி வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.இதனைபோல், பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர்களுக்கான வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.அதன் ஒரு பகுதியாக, பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு, மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவன துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மேலும், நிதின் கட்கரி கூறுகையில், மாசுக் கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறை தானாக நடக்கும் வகையில் புதிய வாகன கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் தகுதி சான்றிதழ் வங்கும் மையங்களை அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் அரசு தனியார் பங்களிப்பு (பிபிபி) முறையில் உருவாக்கப்படும். தானியங்கி சோதனைகளில் தேர்ச்சி பெறத் தவறும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதுடன் அவற்றை பறிமுதல் செய்யவும் புதிய வாகன கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை