ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து கவனிக்கும் ஜப்பான்

தினமலர்  தினமலர்
ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து கவனிக்கும் ஜப்பான்

டோக்கியோ: சீனா ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதனை ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு தற்போது கூர்ந்து கவனித்து வருகிறது.

நேற்று சீன பார்லிமென்ட் கூடியது. இதில் 14வது ஐந்தாண்டுத் திட்டம் சீன கம்யூனிச அரசால் அமல்படுத்தப்பட்டது. தெற்கு ஆசியாவை நோக்கி திபெத் வழியாக ரயில் தடம் அமைக்கும் மசோதா முதல் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சீனா கூடுதலாக 6.8 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி 29 பில்லியன் டாலர் ஆகியது.

அதிக ராணுவ வீரர்களைக்கொண்ட உலகின் சக்திவாய்ந்த ராணுவம் என்ற பெயரைப் பெற்றுள்ள சீனா, 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சமடைய செய்துள்ளது. சீனாவின் இந்த செயலை ஜப்பான் கூர்ந்து கவனித்து வருகிறது.

உலகிலேயே சக்திவாய்ந்த கப்பல் படையாக சீன கப்பல் படை விளங்கும் நிலையில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் கூடுதலான தாக்குதல் உபகரணங்கள், ரேடார் கருவிகள் உள்ளிட்டவற்றை சீனா உற்பத்தி செய்யும். இதனால் அண்டை நாடுகளுக்கு அவ்வப்போது தொடர் அச்சுறுத்தல் ஏற்படும் என்று ஜப்பான் அரசு கருதுகிறது.

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் சென்காகோ தீவு விவகாரத்தில் அடிக்கடி மோதல் உண்டாகிறது. இந்தத் தீவு தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த தீவில் சீன ராணுவத்தினர் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில் சீன ராணுவத்தின் பலம் அதிகரித்தால் இந்த தீவை சீனா முழுவதுமாக ஆக்கிரமிக்கும் வாய்ப்புள்ளது.

வரலாற்றுப் பூர்வமாகவும் இந்த தீவு ஜப்பானுக்கு சொந்தம் என்று ஜப்பான் அரசு கூறிவருகிறது. இதுகுறித்து ஜப்பானும் அமெரிக்காவும் முன்னதாக கலந்து ஆலோசித்தன. அத்துமீறி தாக்குதல் நடத்துவதை சீனா பல ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அண்டை நாடுகளுடன் சீன கப்பற்படை மற்றும் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது. இதற்கு சீன தேசிய காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளது. தற்போது ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் சீனா இந்த தீவு விவகாரத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்த வாய்ப்பு அதிகம் என ஜப்பான் கருதுகிறது.

மூலக்கதை