தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடி படத்தை 'நீக்குங்கள்'

தினமலர்  தினமலர்
தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடி படத்தை நீக்குங்கள்

..புதுடில்லி:'சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், கொரோனா தடுப்பூசி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மற்றும் படத்தை நீக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் நடந்து வருகிறது. தடுப்பூசி பெறுவோருக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.அந்த சான்றிதழில், பிரதமர் நரேந்திர மோடியின் படம், பெயர் மற்றும் அவர் கூறிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

'தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கொரோனா சான்றிதழில் இருந்து, பிரதமர் மோடியின் படம், பெயரை நீக்க உத்தரவிட வேண்டும்' என, மேற்கு வங்கத்தில் ஆளும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் சார்பில், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.
'தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அரசு திட்டங்களில், பிரதமர், முதல்வர் உள்ளிட்டோரின் பெயர், படம் இடம்பெறக் கூடாது. ஆனால், மோடி அந்த விதிகளை மீறியுள்ளார். 'மேலும், சான்றிதழில் இருந்து, மோடியின் படம், பெயரை நீக்க உத்தரவிட வேண்டும்' என, அந்தக் கடிதத்தில், திரிணமுல் காங்., மூத்த தலைவர் டெரக் ஓபிரையன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு, தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், 'சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து, பிரதமர் மோடியின் படம், பெயரை நீக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னதாக, மேற்கு வங்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வைக்கப்பட்டுள்ள, பிரதமர் மோடி படத்துடன் கூடிய விளம்பரங்களை நீக்க, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுஇருந்தது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அந்த விளம்பரங்கள் இருப்பதால், அவற்றை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1.95 கோடி 'டோஸ்' தடுப்பூசிகொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நம் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு, முதல், 'டோஸ்' தடுப்பூசி போடும் பணிகள், ஜன., 16ம் தேதி துவங்கின. அடுத்த கட்டமாக, இம்மாதம், 1ம் தேதி முதல், 60 வயதிற்கு மேலானோர் மற்றும் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளான, 45 வயது நிறைவடைந்தோருக்கு, தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டன.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு, பிப்., 13 முதல், இரண்டாவது டோஸ் தடுப்பூசிசெலுத்தப்பட்டு வருகிறது.கடந்த, 49 நாட்களில், ஒரு கோடியே, 94 லட்சத்து, 97 ஆயிரத்து, 704 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மூலக்கதை