இன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி

தினகரன்  தினகரன்
இன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி

அகமதாபாத: இங்கிலாந்து அணியுடன் நடந்த 4வது மற்றும் கடைசி டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 227 ரன் வித்தியாசத்தில் வென்றதை தொடர்ந்து, தொடரையும் எளிதாக கைப்பற்றும் என்பதே கிரிக்கெட் பிரபலங்களின் கணிப்பாக இருந்தது. ஆனால், அடுத்து நடந்த 2 டெஸ்டிலும் இந்திய அணி முறையே 317 ரன் வித்தியாசத்திலும், 10 விக்கெட் வித்தியாசத்திலும் இமாலய வெற்றிகளை பதிவு செய்து பதிலடி கொடுத்தது.இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்திருந்தது. ரோகித் 49 ரன், ரிஷப் பன்ட் 101 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். பன்ட் - வாஷிங்டன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தது, அணியை சரிவில் இருந்து மீட்டது. வாஷிங்டன் 60 ரன், அக்சர் 11 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் 8வது விக்கெட்டுக்கு 106 ரன் சேர்த்தனர். அக்சர் 43 ரன் எடுத்து ரன் அவுட்டாக, அடுத்து வந்த இஷாந்த், சிராஜ் டக் அவுட்டாகினர். இந்தியா முதல் இன்னிங்சில் 365 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வாஷிங்டன் 96 ரன்னுடன் (174 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, லீச் 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 160 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, அஷ்வின் - அக்சர் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 135 ரன்னுக்கு சுருண்டது (54.5 ஓவர்). கேப்டன் ஜோ ரூட் 30 ரன், லாரன்ஸ் 50 ரன், போப் 15, போக்ஸ் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின், அக்சர் தலா 5 விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா, 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ரிஷப் பன்ட் ஆட்ட நாயகன் விருதும், அஷ்வின் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலமாக ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடும் வாய்ப்பை இந்திய அணி பெற்றது.அஷ்வின் அசத்தல்இத்தொடரில் 8 இன்னிங்சில் 32 விக்கெட் வீழ்த்தி முதலிடம் பிடித்ததுடன், 6 இன்னிங்சில் களமிறங்கி 189 ரன் (அதிகம் 106, சராசரி 31.50) விளாசி ஆல் ரவுண்டராக அசத்திய அஷ்வின் தொடர் நாயகன் விருது பெற்றார். அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் அவர் வாஷிங்டன் (6வது இடம், 181 ரன்), கேப்டன் கோஹ்லியை (7வது இடம், 172 ரன்) முந்தி 5வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.வாவ் வாஷிங்டன்பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் 96* ரன் விளாசினார். அக்சர் ரன் அவுட்டானதும்... அடுத்து வந்த சிராஜ், இஷாந்த் டக் அவுட்டாக வாஷிங்டன் சதமடிக்கும் வாய்ப்பு நழுவியது.* 8வது முறையாக தொடர் நாயகன் விருதை அஷ்வின் பெறுகிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் முரளிதரன் (11 முறை, 133 டெஸ்ட்),  2வது இடத்தில் ஜெப் காலிஸ் (9 முறை, 166 டெஸ்ட்), 3வது இடத்தில் அஷ்வின் உள்ளனர்.* அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள்  வரிசையில் முதலிடத்தில் உள்ள  திலீப் தோஷியின் (27 விக்கெட்) சாதனையை அக்சர் சமன் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஷிவ்பால் யாதவ் (24),  அஷ்வின் (22), வெங்கட்ராகவன் (21) ஆகியோர் உள்ளனர். * இத்தொடரில்  அக்சர் விளையாடிய 5 இன்னிங்சிலும் முறையே 9, 20, 1, 1, 2வது பந்திலேயே முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதித்துள்ளார். 6வது இன்னிங்சில் மட்டும் சற்று தாமதமாக 30வது பந்தில்தான் முதல் விக்கெட்டை அள்ளினார்.* ஸ்டோக்ஸ் இதுவரை ஆசியாவில் 32 இன்னிங்ஸ் விளையாடி 20 முறை ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்துள்ளார். அதில் 16 இன்னிங்சில் அஷ்வின் பந்துவீச்சை எதிர்கொண்டு 9 முறை ஆட்டமிழந்துள்ளார். நேற்று 33வது இன்னிங்சிலும் 20வது முறையாக அக்சரிடம் வீழ்ந்தார்.* இங்கிலாந்து அணி 5 இன்னிங்ஸ்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்தான் 200 ரன்னை கடந்தது. அந்த அணி முதல் டெஸ்ட் 2வது இன்னிங்சில் 178 ரன் எடுத்தது. அடுத்த 2 டெஸ்ட்களின் 4 இன்னிங்ஸ்களிலும் முறையே   134,  164,  112, 81 ரன்னுக்கு சுருண்டது. 2வது இன்னிங்சிலும் 135 ரன்னில் ஆட்டமிழந்தது.* நேற்று 2வது இன்னிங்சில் 5 விக்கெட் அள்ளியதன் மூலம் 30வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். உள்நாட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் அஷ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.* முதல் டெஸ்டில் தோற்ற பிறகு இந்தியா தொடரை வெல்வது இது 6வது முறையாகும். ஏற்கனவே 1972/73ல் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரை 2-1, 2000/01ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1,  2015ல்  இலங்கைக்கு எதிராக 2-1,  2016/17 மற்றும் 2020/21ல்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இப்போது 6வது முறையாக இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.* கேப்டன்  ரூட் சதமடித்த டெஸ்ட்களில் இதுவரை இங்கிலாந்து தோற்றதில்லை. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 218 ரன் விளாசினார் ரூட். அதில் இங்கிலாந்து வெற்றியும் பெற்றது. அதன் பிறகு ரூட்டை சதமடிக்கவே விடவில்லை இந்திய வீரர்கள். ரூட் கடந்த 4 டெஸ்ட்களின் 8 இன்னிங்சில் முறையே 218, 40, 6, 33, 17, 19, 5, 30 ரன் எடுத்துள்ளார்.* இந்தியாவுக்கு எதிராக கடந்த 5  டெஸ்ட்களில் விளையாடிய பேர்ஸ்டோ  தலா ஒரு இன்னிங்சில் டக் அவுட்டாகி உள்ளார். அதிலும் 3வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் டக் அவுட்டானார். ஆக கடந்த 5 டெஸ்ட்களில் 10 இன்னிங்சில்  15, 0, 6, 0, 0, 18, 0, 0, 28, 0 ரன் எடுத்துள்ளார்.

மூலக்கதை