இந்தியாவுக்கு தப்பி வந்த 30 பேரில் 8 இளம் போலீசாரை மட்டும் கேட்கும் மியான்மர் ராணுவம்: மத்திய அரசுக்கு கடிதம்

தினகரன்  தினகரன்
இந்தியாவுக்கு தப்பி வந்த 30 பேரில் 8 இளம் போலீசாரை மட்டும் கேட்கும் மியான்மர் ராணுவம்: மத்திய அரசுக்கு கடிதம்

அய்சால்: மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் சூகியின் ஆட்சியை புரட்சியின் மூலம் கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இதை ஏற்காத மக்கள், ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவம் ஆட்சிக்கு பயந்து, மியான்மரில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் எல்லை வழியாக தப்பி வருகின்றனர். சமீபத்தில், மியான்மர் காவல் துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வடகிழக்கு மாநிலமான மிசோராமுக்கு வந்து தங்கியுள்ளனர். இது பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது.இந்நிலையில், தப்பி வந்த போலீசாரில் 8 பேரை மட்டும் திருப்பி அனுப்பும்படி இந்தியாவுக்கு மியான்மர் ராணுவ அரசு கடிதம் எழுதியுள்ளது. அது கேட்டுள்ள போலீசார் அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை மட்டும் ஒப்படைக்கும்படி மியான்மர் ராணுவம் கேட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை