கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி

சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி, அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் பாஜ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.



மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவது இது 9வது முறை ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன்(69), திருமணமாகாதவர்.

சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். 1999 அக்டோபரில் நடைபெற்ற 13வது மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் (தற்போதைய கன்னியாகுமரி தொகுதி) வெற்றிபெற்று 2000ம் ஆண்டில் மத்திய அமைச்சராக பணியாற்றினார்.

2009 டிசம்பர் முதல் 2014 ஆகஸ்ட் வரை பா. ஜ மாநில தலைவராக இருந்தார். 2014 மே மாதம் நடைபெற்ற 16வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றும் மத்திய அமைச்சராக பணியாற்றினார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.

வசந்தகுமாரிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எச். வசந்தகுமார் இறந்ததால்தான் தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் பொன். ராதா கிருஷ்ணன் தற்போது போட்டியிடுவது ஒன்பதாவது முறையாகும்.

நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் 1991, 1996, 1998 தேர்தல்களில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவருக்கு கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை