தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக மம்தாவுக்கு நந்திகிராமில் 2 வீடுகள் ‘புக்கிங்’ மேற்குவங்க தேர்தல் களம் சூடுபிடிப்பு

தினகரன்  தினகரன்
தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக மம்தாவுக்கு நந்திகிராமில் 2 வீடுகள் ‘புக்கிங்’ மேற்குவங்க தேர்தல் களம் சூடுபிடிப்பு

கொல்கத்தா: நந்திகிராமல் தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக முதல்வர் மம்தா தங்குவதற்காக 2 வீடுகள் ‘புக்கிங்’ செய்யப்பட்டுள்ளன. அங்கு தேவையான வசதிகளும் தயாராக உள்ளது. மேற்குவங்க சட்டப் பேரவை தேர்தல் வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை எட்டு  கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக நந்திகிராமில்  ஏப்ரல் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், ஆளும் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிழக்கு மிட்னாபூரில் உள்ள நந்திகிராமில் தான் போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இந்த தொகுதி தான், அவரது அரசியில் வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கியது. தொடர்ந்து மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார். மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுயில் போட்டியிடுதல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, உள்ளூர் தலைவர்கள் மிட்னாபூரில் அவருக்காக ஒரு புதிய வாடகை வீட்டை தேடிவந்தனர். தற்போது நந்திகிராமில் அவர் போட்டியிடுவது உறுதியானதால், ராயபாராவில் ஒரு படுக்கையறை மற்றும் இரண்டு சமையலறை வசதிகளை கொண்ட வாடகை வீட்டை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால் விரைவில் அங்கு சென்று தனது ெதாகுதியில் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து, மம்தாவுக்கு வாடகை வீடு விட்ட வீட்டின் உரிமையாளர் விஷ்ணு பூயான் கூறுகையில், ‘முதல்வர் மம்தா பானர்ஜி எங்கள் வீட்டில் தங்கியிருந்து பிரசாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதற்காக நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். வீட்டை தற்போது பழுதுபார்த்து சீர்செய்துள்ளோம். சுவர்களுக்கு வர்ணங்கள் பூசியுள்ளோம். இது நாங்கள் அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை. சுமார் இருபது நாட்களுக்கு முன்பே, என்னிடம் வீடு கேட்டு கட்சி தலைவர்கள் அணுகினர்’ என்றார். அதேநேரம், ரியாபராவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள படோலாவில், மம்தா தங்குவதற்காக மற்றொரு வாடகை வீடும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடானது, இரண்டு மாடி வசதியுடையது. இருப்பினும், இந்த இரண்டு வீடுகளில் எந்த வீட்டில் மம்தா தங்கியிருந்து பிரசாரத்தை மேற்கொள்வார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து திரிணாமுல் எம்பி டோலா சென் கூறுகையில், ‘முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டில் எந்த வீடு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்றார்.

மூலக்கதை