விஷ சாராயம் குடித்து 19 பேர் பலியான வழக்கு; 9 பேருக்கு தூக்கு 4 பெண்களுக்கு ஆயுள்: பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தினகரன்  தினகரன்
விஷ சாராயம் குடித்து 19 பேர் பலியான வழக்கு; 9 பேருக்கு தூக்கு 4 பெண்களுக்கு ஆயுள்: பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோபால்கஞ்ச்: பீகாரில் விஷ சாராயம் குடித்து 19 பேர் பலியான வழக்கில் 9 பேருக்கு தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், விற்பனை மையங்களும் தடையை மீறி செயல்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக மாநிலத்தில் விஷம்  மதுபானம் தயாரித்து சிலர் சப்ளை செய்து வருகின்றனர். இது சாதாரண மதுபானத்தை விட மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆல்காஹால் என்பதால் அவ்வப்போது விஷ சாராயம் குடித்து மரணம் அடைவது வாடிக்கையாக உள்ளது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி கூட, முசாபர்பூர் மாவட்டத்தின்  கத்ரா அடுத்த தர்கா டோலாவில் விஷ சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர்.  அதற்கு சில வாரங்களுக்கு முன் கோபால்கஞ்சில் விஷ சாராயம் குடித்து இரண்டு பேர் இறந்தனர். இரண்டு பேர் பார்வையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஊரில் கடந்த 2016ம் ஆண்டில் விஷ சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். 6 பேரின் கண்பார்வை பறிபோனது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகினா பாஸி, ரூபேஷ் சுக்லா உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். கிட்டதிட்ட 5 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் 13 பேரை குற்றவாளிகள் என்று கோபால்கஞ்ச் நீதிமன்றம் அறிவித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒரு குற்றவாளி வழக்கு நடந்த காலகட்டத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேருக்கு தண்டனை விபரங்களை வெளியிட்டது. அதன்படி, 9 பேருக்கு தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

மூலக்கதை