அனல் பறக்கும் மேற்கு வங்க அரசியல் களம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்தார்

தினகரன்  தினகரன்
அனல் பறக்கும் மேற்கு வங்க அரசியல் களம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்தார்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று பாஜக-வில் இணைந்தார். மே.வங்கத்தில் 294 பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் உத்வேகத்தில் இருக்கிறது பாஜ. அது, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளை வளைத்து போட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் முக்கிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் சொந்த பலத்தில் களம் காண்கிறார் முதல்வர் மம்தா. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே மேற்குவங்க அரசியலில் உச்சபட்ச பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று பாஜக-வில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திரிணாமுல் காங்கிரசை மேற்கு வங்காளம் நிராகரித்துள்ளது. மக்களுக்கு வளர்ச்சி வேண்டுமே தவிர ஊழலும், வன்முறையும் தேவையில்லை. நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ? இல்லையோ? தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் நான் பங்கேற்பேன் எனவும் கூறினார். முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எம்.பி.யாகவும் செயல்பட்டு வந்த தினேஷ் திரிவேதி கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், திணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் விலகினார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகியதால் அவர் பாஜக-வில் இணைவார் என பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. அந்த கருத்துக்களை மெய்ப்பிக்கும் வகையில் இன்று தினேஷ் திரிவேதி பாஜக-வில் இணைந்துள்ளார். தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரசில் உள்ள 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், நடிகை, நடிகர்கள் பாஜகவின் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக-வை சேர்ந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.

மூலக்கதை