அதிபர் பைடன் பெருமிதம் வழி நடத்தும் இந்தியர்கள்

தினகரன்  தினகரன்
அதிபர் பைடன் பெருமிதம் வழி நடத்தும் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா சமீபத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதில் ரோவரை வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டவர் இந்திய வம்சாவளியான சுவாதி மோகன். இந்நிலையில், பெர்சவரன்ஸ் வெற்றிக்காக நாசா விஞ்ஞானிகளுடன் அதிபர் ஜோ பைடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது சுவாதி மோகனை புகழ்ந்து பேசிய அவர், ‘‘இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் நாட்டை திறம்பட வழிநடத்துகிறார்கள். நீங்கள் (சுவாதி மோகன்), எனது துணை அதிபர் (கமலா ஹாரிஸ்), எனது எழுத்தாளர் (வினய் ரெட்டி) உட்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள்,” என்று புகழாரம் சூட்டினார். அதிபர் பைடன் பதவியேற்ற 50 நாள்களில் 55 இந்திய வம்சாளிகளை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார். அவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவர். காஷ்மீர் எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகள்: அதிபர் பைடனின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் அளித்த பேட்டியில், ‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் பின்பற்றி பதற்றத்தை தணிக்க வேண்டும். அதே சமயம். காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்’’ என்றார்.

மூலக்கதை