மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு! கிராமத்துக்கு செல்லும். 'மாடல் மொபைல் பூத்'

தினமலர்  தினமலர்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு! கிராமத்துக்கு செல்லும். மாடல் மொபைல் பூத்

திருப்பூர்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு செய்வது குறித்து, கிராமப்புற வாக்காளருக்கு, 'மாடல் மொபைல் பூத்' அமைத்து பயிற்சி அளிக்கவும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி (தனி), பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், தாராபுரம் (தனி), மடத்துக்குளம், உடுமலை என, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், வாக்காளர் விழிப்புணர்வு பணிகளும் வேகமெடுத்துள்ளது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், மாவட்டத்துக்கு ஒரு தொகுதியில் மட்டும், 'விவி பேட்' கருவி பயன்படுத்தப்பட்டது. லோக்சபா தேர்தலை போலவே, இத்தேர்தலில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 'விவி பேட்' கருவி பயன்படுத்தப்பட உள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளித்து, தங்களது ஓட்டு, தாங்கள் பதிவு செய்த வேட்பாளருக்கு பதிவாகும் நடவடிக்கையை உறுதி செய்ய, 'விவி பேட்' பயன்படுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் 'விவி பேட்' கருவி இயக்கம் குறித்து பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம், பயிற்சி அளிக்க வசதியாக, 'ஸ்டிக்கர்' ஒட்டிய, 167 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. வரும் 8ம் தேதி முதல், ஓட்டுப்பதிவு செய்வது குறித்து, ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளருக்கு பயிற்சி அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேர்தல் வரையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல் விளக்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், ஓட்டுப்பதிவு செய்யும் செயல்விளக்கத்தை துவக்கி வைத்தார்.'பேலட்' யூனிட்டில் ஓட்டுப்பதிவு செய்து, 'விவி பேட்' மூலம், தான் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டு பதிவாவதை பார்த்து உறுதி செய்வது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:சட்டசபை தொகுதி வாரியாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு, ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களும், எவ்வாறு ஓட்டுப்பதிவு செய்வது என தெரிந்துகொள்ளலாம்.

கிராமப்புற வாக்காளருக்கும், மூத்த வாக்காளர்களுக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு செய்வது குறித்து பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் வைத்து, 'மொபைல் பூத்' போல் இயக்கி, கிராமப்புறங்களுக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

மூலக்கதை