கோவையில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு! காரணம், மாஸ்க் அணிய மறுப்பு

தினமலர்  தினமலர்
கோவையில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு! காரணம், மாஸ்க் அணிய மறுப்பு

கோவை:மக்களின் அஜாக்கிரதையால், கோவையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த இரு ஆண்டுகளில், கொரோனா என்ற ஒரு வார்த்தை, உலகையே புரட்டிப் போட்டது. அந்த பாதிப்புகளை நினைத்தாலே நடுக்கம் ஏற்படுகிறது.
யார், யார் உயிரோடு இருக்கப்போகிறோம் என்ற நிச்சயமற்ற நிலை இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளால், தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் வைரஸ் முற்றிலும் இல்லாததைப்போல், மக்கள் பொது இடங்களில், தேர்தல் பிரசார கூட்டங்களில் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல், நடமாடி வருகின்றனர்.இதன் விளைவாக, 40க்கு கீழ் வந்த ஒரு நாள் பாதிப்பு, இப்போது மீண்டும் 48க்கு மேல் உயர்ந்து வருகிறது. இதை தவிர்க்க, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருந்தாலும், அலட்சியப்போக்கு அதிகரித்து விட்டது. யாரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை.இதன் காரணமாக, மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.
அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ''ஆனால், அதை வீணடிக்கும் விதமாக, மக்களின் நடவடிக்கை உள்ளது. அலட்சியம் தொடர்ந்தால், நோய் மீண்டும் அதிகரிக்கும். அனைவரும் மாஸ்க் அணிந்து கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.'மீண்டும் பரவ வாய்ப்பு'தமிழகத்தை பொறுத்தவரை, பாதிப்பு அதிகரிக்கவில்லை. இருப்பினும் பொதுமக்களிடம் இருந்த விழிப்புணர்வு, தற்போது குறைந்துள்ளது. திருமணம், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை.
இதன் மூலம், நோய் பரவ வாய்ப்புள்ளது. பாதிப்பு மீண்டும் அதிகரிக்கலாம். இதைக்கருத்தில் கொண்டே விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.-டாக்டர் முரளி தொற்று நோய் சிறப்பு நிபுணர் 'பாதிப்பு அதிகரிக்கிறது'நிச்சயமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. காரணம், பாதிப்புக்குள்ளானவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கலாம்.
வைரஸின் தன்மை மாறியிருக்கலாம். மிக முக்கியமாக, மக்களிடம் அலட்சியப் போக்கு அதிகரித்து விட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, மீண்டும் பழைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.-டாக்டர் வருண் சுந்தரமூர்த்தி தொற்று நோயியல் நிபுணர்.

மூலக்கதை