போட்டி 23க்கு; வாக்குறுதி 234க்கு :பா.ம.க., தேர்தல் அறிக்கை

தினமலர்  தினமலர்
போட்டி 23க்கு; வாக்குறுதி 234க்கு :பா.ம.க., தேர்தல் அறிக்கை

எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை கணக்கில் கொள்ளாமல், தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பாட்டாளி மக்கள் கட்சியின் தனி ஸ்டைல். இம்முறையும், 23 தொகுதிகளில் தான் போட்டி என்றபோதிலும், 234க்கும் பொதுவாக, 167 வாக்குறுதிகள் அடங்கிய, தேர்தல் அறிக்கையை, முதல் கட்சியாக வெளியிட்டிருக்கிறது.

பள்ளி கல்வி

* மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இலவச கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே செலுத்தும்
* இடைநிற்றலை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம், 500 ரூபாய், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் நிதியுதவி
* மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மற்றும் பேச்சு திறனை வலுப்படுத்தும் வகையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள, 9ம் வகுப்பு முதல் சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

கமென்ட்:அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஏற்கனவே இலவச கல்வி வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி கட்டணத்தை, அரசு ஏற்கும் என்றால், அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலை வரலாம். இடைநிற்றலை தடுக்க நிதியுதவி, ஓரளவுக்கு உதவலாம். ஆங்கில பேச்சு பயிற்சி அவசியம். நுழைவு தேர்வுக்கான பயிற்சியும், நல்ல முயற்சி.

உயர் கல்வி'* பொதுத் துறை வங்கிகளில், மாணவர்கள் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்
* வருமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உயர் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
* அரசு கல்லுாரி மாணவர்களில், 1,000 பேரும், மாணவியரில், 1,000 பேரும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், உயர் கல்வி படிக்க அரசு செலவு செய்யும்
* அனைத்து மாவட்டங்களும், ஐந்து மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும், ஐ.ஐ.டி.,க்கு இணையான உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனம், சட்டக் கல்லுாரி மற்றும் வேளாண் கல்லுாரி அமைக்கப்படும்
* அரசு பள்ளி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை, அரசு பொறியியல் கல்லுாரிகளில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்
* ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - மத்திய பல்கலை, தேசிய சட்ட பள்ளி உள்ளிட்டவற்றில், 50 சதவீத இடங்களை, தமிழக மாணவர்களுக்கு வழங்க, வலியுறுத்துவோம்

கமென்ட்:


சுகாதாரத் துறை*அனைவருக்கும் இலவச மருத்துவம், இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
*கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிசிக்சைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில், சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்
* ஐம்பது வயதை கடந்த அனைவருக்கும், முழு மருத்துவ பரிசோதனை இலவசமாக செய்யப்படும்
*காஞ்சிபுரம், பெரம்பலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்படும். கடலுார், ஈரோடு மாவட்டங்களில், இரண்டாவது அரசு மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்படும்
* மருத்துவர்கள் , கூட்டுறவு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும். அதற்கான செலவில், 25 சதவீதத்தை, அரசு மானியமாக வழங்கும்
*கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால நிதியுதவி, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

கமென்ட்இலவச மருத்துவம், இலவச காப்பீடு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சைக்கான தனிப் பிரிவு துவங்கப்பட்டு விட்டது. மாவட்டம்தோறும் மருத்துவ கல்லுாரி என்பதும் செயலுக்கு வந்து விட்டது. கூட்டுறவு மருத்துவ கல்லுாரி என்பது புதிய யோசனை.

வேளாண் துறை*தமிழகத்தில் விளையும் அனைத்து விளைபொருட்களும், அரசால் கொள்முதல் செய்யப்படும்
* காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்
* வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வேளாண் சார்ந்து, நான்கு அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும்
* 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்
* கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் பயிர் கடன்களுக்கு, 15 சதவீத மானியம் வழங்கப்படும்

கமென்ட்அனைத்து விளைபொருளையும், அரசே கொள்முதல் செய்வது நல்லது தான்; தனியாரையும் ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் தனி பட்ஜெட் என்றால், மொத்த பட்ஜெட்டுக்கு வேலையே இல்லை. வயது, 60 ஆனாலே, பென்ஷன் உண்டு என்ற பிறகு தனியாக எதற்கு விவசாய ஓய்வூதியம்? வேளாண்மைக்கு நான்கு அமைச்சகங்கள் என்பது, அமைச்சர்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கான செலவுகளையும் உயர்த்தவே உதவும். பயிர் கடனை மொத்தமாக தள்ளுபடி செய்த பின், மானியம் வழங்குவது எப்படி?

நீர்வளத் துறை*காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம், விரைவில் ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் துவங்கப்படும்
* 1 லட்சம் கோடி மதிப்பில், 20க்கு மேற்பட்ட பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்
* தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம், முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்

கமென்ட்ஏற்கனவே, மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்; தமிழகத்தில் ஆறுகள் இணைப்பு, செயல்பாட்டில் உள்ளது தான்.

சமூக நீதி* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்
* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்து ஜாதிகளுக்கும் தனித்தனி வாரியம் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் ஐந்து ஆண்டுகளில், 3 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்
* அரசு வேலைகள் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தரப்படும். தனியார் நிறுவனங்களில், 80 சதவீத பணியிடங்கள், தமிழக இளைஞர்களை கொண்டு நிரப்புவது கட்டாயம் ஆக்கப்படும்
*மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகளை தவிர, மற்ற பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தவரை நிரப்ப வலியுறுத்தப்படும்
* இரண்டாவது தலைநகராக திருச்சியும், மூன்றாவது தலைநகராக, மதுரையும் அறிவிக்கப்படும்
* ஒரு மாவட்டத்தில், 12 லட்சம் பேர் வாழும் வகையில், மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்
* முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விபரங்கள், ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாள் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்
* ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும், அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள், மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்

கமென்ட்ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது. வாரியங்கள் எண்ணிக்கை, அதிகாரிகளுக்கே தெரியாது; அதற்கே தலைவர் நியமிக்க முடியாத அளவுக்கு, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. தமிழர்களுக்கே முன்னுரிமை என்பதும் சரி. ஆனால், நம் மக்கள் செய்ய தயங்கும் வேலைகளுக்கு, யாரை தேடுவது? மாவட்ட சீரமைப்பு, சொத்து அறிவிப்பு, அமைச்சர் செயல்பாடுகள் ஆய்வு போன்றவை பாராட்டுக்குரியவை. திருச்சி, மதுரை தலைநகர் ஆவதும் காலத்தின் கட்டாயம்.

ஊழல் ஒழிப்பு*லோக் ஆயுக்தா அமைப்பு வலிமையானதாக மாற்றப்படும்
*அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
* அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தலைவர்களாக, நல்லவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்
*முழு மதுவிலக்கை அமல்படுத்த, வலியுறுத்துவோம். கள்ளச்சாராயத்தை தடுக்க திட்டம் செயல்படுத்தப்படும்

கமென்ட்லோக் ஆயுக்தா அமைப்பு வலிமை பெறுவது நல்லதே. சி.சி.டி.வி., கேமராக்கள், எல்லா அலுவலகங்களுக்கும் வந்து விட்டன. தேர்வாணையங்களுக்கு நேர்மையானவர்களே நியமனம் என்பது, சிறந்த ஆலோசனை. மதுவிலக்கு அமலும், கள்ளச்சாராய ஒழிப்பும் நடந்தால் அதிசயம்.

தொழில் துறை* அனைத்து மாவட்டங்களிலும், ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும்
*தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திப்பதற்கு, வாரம், மூன்று மணி நேரம் முதல்வர் ஒதுக்குவார்
*முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்காக, முதல்வர் அலுவலகத்தில், தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்
*தொழில் வளர்ச்சிக்காக, தமிழகம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனி பொருளாதார ஆணையரகமாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமை செயலர் நிலையில் உள்ள அதிகாரி, ஆணையராக நியமிக்கப்படுவார்

கமென்ட்தொழில் முனைவோரை சந்திக்க, முதல்வர் நேரம் ஒதுக்கல்; முதல்வர் அலுவலகத்தில் தனிப்பிரிவு, பொருளாதார ஆணையரகம் போன்றவை நடைமுறைக்கு வந்தால், தொழில் துறையில் மாற்றங்கள் நிகழலாம். அனைத்து மாவட்டங்களிலும், சிப்காட் வளாகம் என்பதை விட, ஏற்கனவே உள்ள சிப்காட் வளாகங்களை சரியான முறையில் பராமரிப்பதே, இன்றைய தேவை.

வேலைவாய்ப்பு* ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். இதற்கென தனித்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்
*வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகளில், 50 லட்சம் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்
*6 பெரிய துறைமுகம் மற்றும், 20 சிறிய துறைமுகங்களை இணைத்து, சர்வதேச தளவாட கிடங்கு மையம் அமைக்கப்படும். துறைமுக நகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட ஆயிரக்கணக்கான கிடங்குகள் உருவாக்கப்படும்
*கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ஆடை சார்ந்த தொழில்களும், நீலகிரி, குமரி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில், சுற்றுலா சார்ந்த தொழில்களும் ஏற்படுத்தப்படும். இதனால், 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்

கமென்ட்அருமையான வாக்குறுதிகள். செயலுக்கு வர தேவை நிறைய கோடிகள். ஒரு கோடி பேருக்கு வேலை; 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கு எல்லாம், எங்கிருந்து வரும் நிதியாதாரம்?

பொருளாதார வளர்ச்சி*பொருளாதார விஷயங்களில், முதல்வருக்கு ஆலோசனை வழங்க, பொருளாதார வல்லுனர் குழு அமைக்கப்படும்.
*அரசு பஸ்களில் பயணியருக்கு பாதிப்பில்லாத வகையில், சரக்குகளை ஏற்றி செல்வதன் வாயிலாக, ஒவ்வொரு பஸ்சுக்கும் சராசரி வருவாய், 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

கமென்ட்எந்த அரசு வந்தாலும் இதை செய்யலாம். முதல்வருக்கு பொருளாதார ஆலோசனையும், அரசு போக்குவரத்து கழகத்திற்கு பொருளாதார ஆதாரமும் அவசியம்.

மகளிர் நலம்:* அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், மகளிருக்கான மகப்பேறு விடுப்பு, ஒன்பது மாதங்களில், இருந்து ஓராண்டாக உயர்த்தப்படும். 40 வயது கடந்த, குடும்ப தலைவியருக்கு, அரசு, தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும்
*காவல் துறையில் மகளிருக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
*18 வயது வரை அனைவரும் குழந்தைகளாக கருதப்படும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்படும்; குழந்தைகளுக்கான கொள்கை, செயல் திட்டம் வெளியிடப்படும்.
* பெண்களுக்கான திருமண வயதை, 21 ஆக உயர்த்தும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
கமென்ட்:

மகப்பேறு விடுப்பு, 9 மாதங்கள் என்பது ஓரளவு நியாயமானதே. ஓராண்டாக உயர்த்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனிக்க வேண்டும். இலவச, 'ஹெல்த் செக்கப்' அவசியமானது. அரசு மருத்துவமனையில், குறைந்த கட்டணத்திலும், தனியாரில் இலவச காப்பீடிலும், அதை பெறலாம். காவல் துறையில், மகளிர் போலீஸ் வந்து பல காலம் ஆயிற்று. 33 சதவீதத்திற்கு பதிலாக, பாலியல் தொந்தரவை தடுக்க, பா.ம.க., குரல் கொடுத்திருக்கலாம்.

போக்குவரத்து, மின்சாரம், குடிநீர்* 200க்கு மேல் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு, நகர பஸ்களும், அதற்கு குறைவான மக்கள் வசிக்கும் இடங்களுக்கு, மினி பஸ்களும் இயக்கப்படும்.
* 2025க்கு பின், புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படாது; மாற்றாக, காற்றாலைகள் அதிகரிக்கப்படும்.
*அனைத்து நகரங்களிலும், வீடுகளுக்கு குழாய் வாயிலாக, துாய குடிநீர் வழங்கப்படும். சென்னை முதல் மாமல்லபுரம் வரை, நான்கு இடங்களில், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்.

கமென்ட்:இருநுாறு பேருக்கு, ஒரு பஸ் இயக்குவது சாத்தியமல்ல; நஷ்டம் கையை கடிக்கும். அனல் மின் நிலையங்களுக்கு, காற்றாலைகள் மாற்றாகி விட முடியாது. எல்லா பருவத்திலும் காற்றாலை மின்சாரம் கிடைக்காது. வீட்டுக்கு வீடு சுத்தமான குடிநீர் என்பது, கேட்க நன்றாக இருக்கிறது. மாதம் மும்மாரி பெய்து, ஆறு, குளம் நிரம்பினால், இது சாத்தியமாகலாம். கடல் நீரை குடிநீராக்கும் ஆலை என்பது புதிதல்ல.

கூட்டணியில் மூன்று கட்சிதானா?பா.ம.க., சார்பில் நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புத்தகத்தின் பின்பக்க அட்டையில், அக்கட்சியின் தேர்தல் சின்னமான மாம்பழத்துடன், கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வின் சின்னங்களான இரட்டை இலையும், தாமரையும் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க., உள்ளிட்ட சில கூட்டணிக்கட்சிகளின் சின்னங்கள் இடம் பெறவில்லை.

மூலக்கதை