'ஸ்டார் ட்ரெக் தொடர் பார்த்து தான் விண்வெளி பணியில் ஆசை வந்தது'

தினமலர்  தினமலர்
ஸ்டார் ட்ரெக் தொடர் பார்த்து தான் விண்வெளி பணியில் ஆசை வந்தது

வாஷிங்டன்:''குழந்தையாக இருந்தபோது அமெரிக்க 'டிவி' தொடரான 'ஸ்டார் ட்ரெக்' பார்த்து தான் விண்வெளி ஆய்வக பணியில் சேரும் ஆர்வம் வந்தது'' என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இந்திய - அமெரிக்க பொறியாளர் ஸ்வாதி மோகன் தெரிவித்தார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வகமான 'நாசா' செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக்காக 'பர்சிவெரன்ஸ்' என்ற விண்கலத்தை அனுப்பியது.செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதை சென்றடைந்த இந்த விண்கலத்தில் இருந்து 'ரோவர்' எனப்படும் கண்காணிப்பு வாகனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கடந்த மாதம் வெற்றிகரமாக தரை இறங்கியது.நாசாவின் இந்த சாதனை முயற்சிக்கு இந்திய - வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி பொறியாளர் ஸ்வாதி மோகன் தலைமை வகித்தார்.

ரோவர் வாகனம் வெற்றிகரமாக தரை இறங்கும் பணியை இவர் தலைமை ஏற்று வழிநடத்திய ஜெட் உந்துவிசை ஆய்வக குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டினர்.இதையடுத்து பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று முன்தினம் உரையாற்றினார்.அப்போது ஸ்வாதி மோகன் உள்ளிட்ட நாசா குழுவினருக்கு அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

'கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் கனவை நனவாக்கி இருக்கிறீர்கள். உங்கள் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டுகள்' என அதிபர் தெரிவித்தார்.அப்போது ஸ்வாதி மோகன் கூறியதாவது:எனக்கு 1 வயது இருக்கும் போது என் பெற்றோருடன் அமெரிக்கா வந்தேன். குழந்தையாக இருந்தபோது பிரபல அமெரிக்க 'டிவி' தொடரான 'ஸ்டார் ட்ரெக்' விரும்பி பார்ப்பேன்.அதில் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு விண்வெளி அறிவியல் குறித்து காட்டப்படும். அதை பார்த்த பிறகு தான் விண்வெளி துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை