மேற்கு வங்கத்தில் 291 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் 291 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 291 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். மே.வங்கத்தில் 294 பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 291 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான முழு வேட்பாளர் பட்டியலையும் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். இது குறித்து மம்தா கூறுகையில், ‘‘இம்முறை, இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மொத்த வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள். 42 முஸ்லிம்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது எங்களுக்கு மிக எளிதான தேர்தலாக இருக்கும் என்றே கருதுகிறேன். நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எவ்வளவு மத்திய படைகளை குவித்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி’’ என்றார்.294 தொகுதிகளில் டார்ஜிலிங்கில் உள்ள எஞ்சிய 3 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசின் கூட்டணி கட்சியான கூர்கா ஜன்முக்தி மோர்சா போட்டியிடுகிறது என்றார்.

மூலக்கதை