நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக விதிமுறைகள் அதிகாரமின்றி இருக்கின்றன: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

தினகரன்  தினகரன்
நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக விதிமுறைகள் அதிகாரமின்றி இருக்கின்றன: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: ஆபாச படங்களை ஒளிபரப்பும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் இல்லாமல், அரசின் விதிகள் வெறும் வழிகாட்டுதல்களாக மட்டுமே இருப்பதாக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், தாண்டவ் வெப் தொடரில், உபி மாநில போலீஸ், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாக, அந்த சீரியல் வெளியான அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய தலைமை அதிகாரி அபர்ணா புரோகித், இயக்குனர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் அபர்ணா புரோகித், முன்ஜாமீன் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் அமர்வு, ` சில குறிப்பிட்ட ஆபாச படங்கள் ஓடிடி தளங்களில் இடம் பெறுவதை முறைப்படுத்த விதிகள் உருவாக்கப்பட வேண்டும்,’ என்று கூறி இருந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது, `ஆபாச படங்களை ஒளிபரப்பும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழி முறைகள், அரசு விதிகளில் இடம் பெறவில்லை. அதனால், அத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அரசின் விதிமுறைகள் அதிகாரமின்றி, வெறும் வழிகாட்டுதல்களாக மட்டுமே உள்ளன,’ என்று நீதிபதி அசோக் பூஷண் வேதனை தெரிவித்தார். மேலும், அபர்ணா முன்ஜாமீன் தொடர்பாக உபி. மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், மத்திய அரசையும் அவரது மனுவில் சேர்த்து கொள்ள வலியுறுத்தினர்.

மூலக்கதை