இந்திய ‘லெஜண்ட்ஸ்’ கலக்கல் வெற்றி: சேவக் அரைசதம் விளாசல் | மார்ச் 05, 2021

தினமலர்  தினமலர்
இந்திய ‘லெஜண்ட்ஸ்’ கலக்கல் வெற்றி: சேவக் அரைசதம் விளாசல் | மார்ச் 05, 2021

ராய்பூர்: வங்கதேச ‘லெஜண்ட்ஸ்’ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சேவக் அரைசதம் விளாச இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராய்பூரில், ‘ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்’ கிரிக்கெட் தொடர் (‘டுவென்டி–20’) நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச ‘லெஜண்ட்ஸ்’ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச ‘லெஜண்ட்ஸ்’ அணிக்கு நஜிமுதீன் (49) ஆறுதல் தர, 19.4 ஓவரில் 109 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்திய ‘லெஜண்ட்ஸ்’ சார்பில் வினய் குமார், பிரக்யான் ஓஜா, யுவராஜ் சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணிக்கு சேவக், கேப்டன் சச்சின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய சேவக், 20வது பந்தில் அரைசதம் கடந்தார். இவருக்கு சச்சின் ஒத்துழைப்பு தந்தார். கலீத் மஹ்மூத் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சேவக் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணி 10.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சேவக் (80 ரன், 35 பந்து, 5 சிக்சர், 10 பவுண்டரி), சச்சின் (33 ரன், 26 பந்து, 5 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை