அதிருப்தியாளர்கள் மீது காங்.,- எம்.பி., கோபம்

தினமலர்  தினமலர்
அதிருப்தியாளர்கள் மீது காங்., எம்.பி., கோபம்

''காங்கிரஸ் தலைமைக்கு, எதிரான அணுகுமுறையை பின்பற்றும், அதிருப்தி தலைவர்களின் போக்கு, சரியானதாக தெரியவில்லை. ஏறி வந்த மரத்தையே வெட்டப் பார்க்கின்றனர்,'' காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, கே.டி.எஸ். துள்சி கூறியுள்ளார்.

தொடர் தோல்விகள் மற்றும் புதிய தலைவர் நியமனம் போன்ற விஷயங்களில், தலைமையோடு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், மோதல் போக்கை பின்பற்றும்
விவகாரம், நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.புதிய தலைவர் நியமனம் குறித்து, 23 பேர் கையெழுத்திட்டு கடிதம் வழங்கியதில் இருந்தே, காங்கிரசுக்குள் நிலவி வந்த புகைச்சல், ராஜ்யசபா, எம்.பி., பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெற்றபின், மேலும் தீவிரமாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியதால், குலாம்நபி ஆசாத்தின் உருவ பொம்மை, ஜம்முவில், காங்கிரஸ் தொண்டர்களால் எரிக்கப்பட்டது.அதிருப்தி தலைவர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து, முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித், நேற்று முன்தினம், பகிரங்க கடிதம் எழுதிஇருந்தார். இந்நிலையில், நேற்று டில்லியில், காங்கிரஸ் எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான, கே.டி.எஸ்.துள்சி கூறியதாவது:தலைமைக்கு எதிரான போக்கை பின்பற்றும் தலைவர்களின் அணுகுமுறை, நன்றி கெட்ட குணத்தின் உச்சகட்டத்தையே காட்டுகிறது; இது, கட்சியின் நலனுக்கு சரியானதாக இருக்கப்போவதில்லை.

இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துமே, கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதை செய்வதாக தெரியவில்லை. தற்போது, இவர்கள் உரசத் துவங்கியிருக்கும் இதே கட்சி தான், அவர்களுக்கு அனைத்தையுமே தந்தது. இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது; அவ்வாறு மறந்தால், அது நன்றி கெட்டத்தனம். ஏறி வந்த மரத்தையே வெட்டப் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -

மூலக்கதை