அக்சர், அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு: 205 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து | மார்ச் 04, 2021

தினமலர்  தினமலர்
அக்சர், அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு: 205 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து | மார்ச் 04, 2021

ஆமதாபாத்: நான்காவது டெஸ்டில் இந்தியாவின் அக்சர் படேல், அஷ்வின் மீண்டும் ‘சுழலில்’ அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டில் வெற்றி பெற்று 2–1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு டான் லாரன்ஸ், டாம் பெஸ் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

அக்சர் அசத்தல்: இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, டாம் சிப்லே ஜோடி மோசமான துவக்கம் தந்தது. அக்சர் படேல் ‘சுழலில்’ சிப்லே (2), கிராலே (9) சிக்கினர். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (5), முகமது சிராஜ் ‘வேகத்தில்’ வெளியேறினார். பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. சிராஜ் வீசிய 15வது ஓவரில் 3 பவுண்டரி விளாசிய ஸ்டோக்ஸ், அஷ்வின் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது சிராஜ் பந்தில் பேர்ஸ்டோவ் (28) வெளியேறினார். அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஸ்டோக்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 24வது அரைசதமடித்தார். இவர், 55 ரன் எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

லாரன்ஸ் ஆறுதல்: பின் இணைந்த போப், டான் லாரன்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. அக்சர் வீசிய 50வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார் லாரன்ஸ். ஆறாவது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்த போது அஷ்வின் ‘சுழலில்’ போப் (29) சிக்கினார். பென் போக்ஸ் (1) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய லாரன்ஸ் (46) ஆறுதல் தந்தார். டாம் பெஸ் (3), ஜாக் லீச் (7) ஏமாற்றினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஆண்டர்சன் (10) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல் 4, அஷ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சுப்மன் ஏமாற்றம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் சுப்மன் கில் (0) அவுட்டானார். பின் இணைந்த ரோகித், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்து, 181 ரன்கள் பின்தங்கி இருந்தது. ரோகித் (8), புஜாரா (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

 

இந்தியாவின் கோஹ்லி கேப்டனாக 60வது டெஸ்டில் களமிறங்கினார். இதன்மூலம் இவர், அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தோனியுடன் பகிர்ந்து கொண்டார். தோனி 60 டெஸ்டில், 27 வெற்றி, 15 ‘டிரா’, 18 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். இதுவரை 59 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள கோஹ்லி, 35 வெற்றி, 10 ‘டிரா’, 14 தோல்வியை பதிவு செய்துள்ளார்.

 

50 டெஸ்ட்

இங்கிலாந்தின் ஜோ ரூட் கேப்டனாக 50வது டெஸ்டில் களமிறங்கினார். இதன்மூலம் இவர், இம்மைல்கல்லை எட்டிய 5வது இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஆனார். ஏற்கனவே அலெஸ்டர் குக் (59 டெஸ்ட்), மைக் ஆதர்டன் (54), மைக்கேல் வான் (51), ஸ்டிராஸ் (50) ஆகியோர் இந்த இலக்கை அடைந்திருந்தனர்.

 

104 ‘டக்–அவுட்’

ஆண்டர்சன் ‘வேகத்தில்’ சுப்மன் கில் (0) அவுட்டானார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக பேட்ஸ்மேன்களை ‘டக்–அவுட்’ செய்த பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் மெக்ராத் உடன் பகிர்ந்து கொண்டார் ஆண்டர்சன். இவர்கள் இருவரும் தலா 104 முறை ‘டக்–அவுட்’ செய்துள்ளனர். அடுத்த இடத்தை ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், இலங்கையின் முரளிதரன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் தலா 102 முறை இப்படி ‘அவுட்’ செய்துள்ளனர்.

மூலக்கதை