கோஹ்லி–ஸ்டோக்ஸ் மோதல் | மார்ச் 04, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி–ஸ்டோக்ஸ் மோதல் | மார்ச் 04, 2021

ஆமதாபாத்: நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இடையே லேசான வார்த்தை மோதல் உண்டானது.

ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், முதல் பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை அவுட்டாக்கினார். இந்த ஓவரின் மீத பந்துகளை பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். இதன் கடைசி பந்து ‘பவுன்சராக’ வந்தது. இந்த ஓவரின் முடிவில் ஸ்டோக்ஸ், சிராஜிடம் ஏதோ கூறினார். இதற்கு பதில் தெரிவிக்காமல் சிராஜ் சென்றார். இதனை பார்த்த இந்திய கேப்டன் கோஹ்லி, ஸ்டோக்சிடம் சென்று பேசினார். இதனால் இருவருக்கும் மிகப் பெரிய வார்த்தை மோதல் உருவாகும் சூழல்நிலை ஏற்பட்டது. அப்போது ஆடுகள அம்பயர்களான நிதின் மேனன், வீரேந்திர சர்மா குறுக்கிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர்.

இதுகுறித்து சிராஜ் கூறுகையில், ‘‘ஸ்டோக்ஸ், என்னிடம் கோபமாக பேசினார். அப்போது குறுக்கிட்ட கேப்டன் கோஹ்லி, இப்பிரச்னையை சுமூகமாக கையாண்டார்,’’ என்றார்.

 

இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர், 4வது டெஸ்டில் விளையாடவில்லை. இவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை என, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. தவிர, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சில இங்கிலாந்து வீரர்களுக்கு வயிற்று கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை