மறக்க முடியுமா? - தொட்டி ஜெயா

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  தொட்டி ஜெயா

படம் : தொட்டி ஜெயா
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சிம்பு, கோபிகா, பிரதீப்
இயக்கம் : வி.இசட்.துரை
தயாரிப்பு : கலைப்புலி எஸ்.தாணு

தாதாவிடம் வளரும் இளைஞன், காதலால், அவரை எதிர்த்தால்... அவன் தான், தொட்டி ஜெயா!

சென்னையின் பிரபல தாதாவான, சீனாதானாவிடம், இளம் வயதிலேயே அடியாளாக சேருகிறார், சிம்பு. ஒரு பிரச்னையில் சிம்புவை, போலீசார் தேட, கோல்கட்டா செல்கிறார். அங்கு, பிரச்னையில் சிக்கியிருக்கும் கோபிகாவை காப்பாற்றி, தமிழகம் அழைத்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை கொல்லும்படி சீனாதானா தன் அடியாட்களுக்கு கட்டளையிடுகிறார். எதற்காக என்பது தான், படத்தின், 'டுவிஸ்ட்!'

'பஞ்ச் டயலாக் பேசி, பறந்து பறந்து அடித்து, நம்மை நோகடித்த சிம்புவா இது' என, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார். கருப்பு உடை, தாடி, மிக சொற்பமான வசனம் என, சிம்பு ஆச்சரியப்படுத்தினார். 'அடிக்கிறேன்; காசு கொடுக்குறீயா' என, சிம்புவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனுக்கு, ஏகப்பட்ட கிளாப்ஸ் கிடைத்தது.

கோபிகா, காதல், பயம், பதற்றம் என, அனைத்தையும் கலந்து கொடுத்து அசத்தியிருந்தார். வில்லன் சீனாதானாவாக, புதுமுகம் பிரதீப் நடித்திருந்தார். இப்படத்தில் நடிக்கவிருந்தவர், காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்த ஜீவன். 'கால்ஷீட்' பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதையடுத்து, சிம்பு நடித்தார்.

யுவன் சங்கர் ராஜா தான், இசை அமைப்பாளராக இருந்தார். ஒரு பாடலும், 'ரெக்கார்டு' செய்து விட்டனர். பின், அவர் விலக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். 'உயிரே என் உயிரே, சம்பா சம்பா லே...' பாடல்கள் ஹிட் அடித்தன. படத்தில் காமெடி, தேவையற்ற இரைச்சல் கிடையாது. தெளிவான ஒளிப்பதிவிற்காக, ராஜ்சேகருக்கு சபாஷ் போடலாம். தொட்டி ஜெயா -- 2 திரைக்கதை எல்லாம் தயாராக இருக்காம். மிரட்டுவரா என்பதை பார்க்கலாம்.

ரவுடி கூட்டத்திற்குள் சிக்கிய காதல், தொட்டி ஜெயா!

மூலக்கதை