பிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு

தினகரன்  தினகரன்
பிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு

புதுடெல்லி: அசாதாரண நிலையை சமாளிக்க வசதியாக பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்களை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடகட்டப்பட உள்ளது. இதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எனினும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இதனால் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. அதையடுத்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்டோரின் இல்லங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. விவிஐபிகளின் பாதுகாப்புக்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. அசாதாரணமான நேரங்களில் தலைவர்கள் பாதுகாப்பாக செல்ல இந்த சுரங்கப்பாதைகள் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்படி பிரதமரின் இல்லம், அலுவலகம் போன்றவை சவுத்பிளாக் பக்கமாக அமைக்கப்படுகிறது.ஆனால் குடியரசுத் தலைவர் இல்லம் சற்று தூரத்தில் இருப்பதாலும், அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான அவசியம் மிகக்குறைவாக இருப்பதாலும், குடியரசுத் தலைவர் இல்லத்தை சுரங்கத்தால் இணைக்க வேண்டிய கட்டாயம் உருவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற திட்டத்தின்படி பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி போன்ற விவிஐபிக்களின் பாதுகாப்பு கருதி பிரதமர் குடியிருப்பு, துணை ஜனாதிபதி வீடு மற்றும் எம்பிக்களின் அறைகளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைக்கும் வகையில் மூன்று நிலத்தடி சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால், வி.ஐ.பிக்கள் எளிதாக சுரங்கப்பாதையின் வழியாக அவைக்கு வரமுடியும். இந்த சுரங்கங்கள் ஒற்றை வழிப்பாதையாக இருக்கும். குறைந்தளவு நீளம் கொண்ட சுரங்கப்பாதை என்பதால் கோல்ஃப் வண்டிகளை பயன்படுத்த முடியும். துணை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் குடியிருப்பு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறைகள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகிலேயே அமைக்கபடவுள்ளன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை