தாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
தாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்

புதுடெல்லி: தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம போன் அழைப்பால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளே செல்ல ஒரு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நினைவுச் சின்னத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை சுமார் 11.20 மணியளவில் அங்கிருக்கும் போலீசாருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து முதல் கட்டமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் போலீசார் அதிரடியாக மின்னல் வேகத்தில் வெளியேற்றினர். மேலும் தாஜ்மஹால் வளாகத்திற்கு வெளியே இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேர தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், மீண்டும் தாஜ்மஹாலை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் அனுமதித்தனர். இருப்பினும் தாஜ்மஹால் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறையின் அவசர உதவி நெம்பரான 112க்கு கால் செய்து வெடிகுண்டு உள்ளதாக பேசிய அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாஜ்மஹால் மட்டுமில்லாமல் மாநிலங்களில் இருக்கும் அனைத்து நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எப் படைக்கு அரசு தரப்பில் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை