தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும் : தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

தினகரன்  தினகரன்
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும் : தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி :சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உட்பட 5மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை, தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகள், கேரளா- 140 தொகுதிகள், புதுவை-30 தொகுதிகள் ஆகி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாகவும், மேலும் 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திற்கு மொத்தம் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகள், 18.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பல்வேறு விதிமுறைகளையும் ஆணையம் வழங்கியுள்ளது. அதில், முக்கியமாக குற்றப்பின்னனி உள்ள வேட்பாளர்கள் அவருக்கான அனைத்து விவரங்களையும் ஊடகம் மற்றும் செய்தித்தாளில் வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,\' விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கள் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை உடனடியாக நீக்க வேண்டும். இது தேர்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாகவும். இதுகுறித்து தேர்தல் நடக்கும் மாநில தேர்தல் ஆணையர்கள் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முன்னதாக மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதி மீறல் என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.இதையடுத்து 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்ட மோடி புகைப்படத்துடன் கூடிய பேனர்களை அகற்றுமாறு மேற்கு வங்க தலைமை தேர்தல் அலுவலகம் நேற்று உத்தரவிட்டது நினைவுக்கூறத்தக்கது.

மூலக்கதை