எதிர்ப்பால் விலகினார் நீரா டான்டன்

தினமலர்  தினமலர்
எதிர்ப்பால் விலகினார் நீரா டான்டன்



வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், தன் நிர்வாகத்தில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பலருக்கு வாய்ப்பு அளித்துள்ளார். வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர் பதவிக்கு, நீரா டான்டன், 50, பெயரை பரிந்துரைத்திருந்தார்.

அமெரிக்கன் வளர்ச்சி மையம் என்ற அரசு சாரா அமைப்பில், கொள்கைகளை வடிவமைப்பதில் நிபுணரான, நீரா டான்டன், பல, எம்.பி.,க்கள் குறித்து, முன்பு, சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தார். அதனால், அவருடைய நியமனத்துக்கு, பல, செனட், எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

செனட்டில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு, தலா, 50 எம்.பி.,க்கள் உள்ளனர். அவருடைய நியமனத்துக்கு, ஜனநாயகக் கட்சி, எம்.பி.,க்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், செனட் சபையின் ஒப்புதல் கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, நீரா டான்டன் அறிவித்து உள்ளார். 'நீண்ட அனுபவம் உள்ள நீரா டான்டனின் சேவையை, சரியான நேரத்தில், சரியான பதவியில் பயன்படுத்துவோம்' என, அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

மூலக்கதை